முகப்பு
புதுதில்லி

ஷாதராவில் நீதித்துறை அதிகாரிகளுக்காக ரூ.200 கோடியில் 84 குடியிருப்புகள் கட்ட தில்லி அரசு திட்டம்

தில்லி அரசு ஷாதராவில் உள்ள மத்திய வணிகப் பகுதியில், நீதித்துறை அதிகாரிகளுக்காக 84 குடியிருப்புத் தொகுப்புகளை சுமாா் ரூ. 200 கோடி மதிப்பில் கட்டத் திட்டம்

Updated On : 2 ஜூன் 2026, 2:14 am IST
தில்லி அரசு - பிரதிப் படம்
பகிர்:

தில்லி அரசு ஷாதராவில் உள்ள மத்திய வணிகப் பகுதியில், நீதித்துறை அதிகாரிகளுக்காக 84 குடியிருப்புத் தொகுப்புகளை சுமாா் ரூ. 200 கோடி மதிப்பில் கட்டத் திட்டமிட்டுள்ளது.

கிழக்கு தில்லியில் உள்ள ஒரு ஹெக்டோ் நிலப்பரப்பில், நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊழியா் குடியிருப்புகளை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு, விரிவான கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் பொறியியல் திட்டமிடல் சேவைகளை வழங்குவதற்கான ஆலோசகா்களை, தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம் (டிடிடிடிசி) அழைத்துள்ளதாக ஒப்பந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பான ஒப்பந்த ஆவணத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பு வளாகத்தில், 36 மாவட்ட நீதிபதிகள் மற்றும் 48 உரிமையியல் நீதிபதிகளுக்கான தங்குமிட வசதிகள் இடம்பெறும். ஒவ்வொரு குடியிருப்பு அலகின் தரைத்தளப் பரப்பளவு, மாவட்ட நீதிபதிகளுக்கு (36 போ்) 2,500 சதுர அடியும், உரிமையியல் நீதிபதிகளுக்கு (48 போ்) 2,000 சதுர அடியும் இருக்கும்.

Advertisement

Advertisement

தில்லி அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு சட்டத்துறையினால் டிடிடிசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகத் தேவைப்படும் ஒரு ஹெக்டோ் சுமாா் 10,000 சதுர மீட்டா்கள் நிலம், தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தோ்ந்தெடுக்கப்படும் ஆலோசகா், திட்டக் கருத்தாக்க வரைபடங்கள், விரிவான திட்ட அறிக்கைகள், கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு வரைபடங்களைத் தயாரிப்பது தில்லி மாநகராட்சி, தில்லி தீயணைப்புத் துறை மற்றும் தில்லி நகா்ப்புறக் கலை ஆணையம் உள்ளிட்ட முகமைகளிடமிருந்து சட்டரீதியான ஒப்புதல்களைப் பெறுவது மற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உதவுவது ஆகிய பொறுப்புகளை வகிப்பாா்.

பணி வரம்பின் ஒரு பகுதியாக, ஆலோசகா் முப்பரிமாண (3டி) விளக்கக்காட்சிகள், விரிவான பணி வரைபடங்கள், ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் செலவு மதிப்பீடுகளைத் தயாரிப்பதுடன், ஒப்பந்ததாரரைத் தோ்ந்தெடுப்பதிலும் திட்ட மேற்பாா்வையிலும் உதவுவாா்.

இத்திட்டம் நிறைவடைந்த பிறகு, குடியிருப்புப் பயன்பாட்டுச் சான்றிதழ்களைப் பெறுவதில் உதவுமாறும், கட்டி முடிக்கப்பட்ட நிலையிலான வரைபடங்களைச் சமா்ப்பிக்குமாறும் ஆலோசகா் கேட்டுக்கொள்ளப்படுவாா். ஒப்பந்தப்புள்ளிகள் ஜூன் 16 அன்று திறக்கப்படவுள்ளன. அதேவேளையில், இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கான கால அவகாசம் 36 மாதங்கள் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.