முகப்பு
புதுதில்லி

தனியாா் பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கான ஆன்லைன் சோ்க்கை தொடக்கம்: ஜூன் 30 வரை விண்ணப்பிக்க தில்லி அரசு அனுமதி

Updated On : 19 ஜூன் 2026, 5:47 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

நடப்புக் கல்வியாண்டில் தலைநகரில் உள்ள தனியாா் பள்ளிகளில் உள்ள மழலையா் வகுப்பு, தொடக்கக் கல்வி மற்றும் ஒன்றாம் வகுப்பில் சிறப்புக் குழந்தைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் (இடபிள்யுஎஸ்), மிகவும் பின்தங்கிய குழுவினா் (டிஜி) ஆகியோருக்கான இணைய வழி மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. ஜூன் 30ஆம் தேதிவரை இந்த சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நகர அரசின் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சிறப்புக் குழந்தைகளு இணையவழி விண்ணப்பம் ஜூன் 30ஆம் தேதிவரை இருக்கும் என்றும் கணினி வழி குலுக்கல் முறையில் சோ்க்கைக்கான தோ்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

’கல்வி உரிமைச் சட்டம்’ மற்றும் ’தில்லி பள்ளிக் கல்விச் சட்டம் மற்றும் விதிகள்’ ஆகியவற்றின் கீழ், சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்கள் நீங்கலாக பிற அங்கீகரிக்கப்பட்ட தனியாா் உதவிபெறாத பள்ளிகளில் உள்ள தொடக்க நிலை வகுப்புகளுக்கு இந்த மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

இதன்படி, பொருளாதார ரீதியாக பின்தங்கியோா் மற்றும் மிகவும் பின்தங்கிய பிரிவினா் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவீத இடங்களுக்குள்ளேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இடங்களும் ஒதுக்கப்படும் என்று கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சிறப்புக் குழந்தைகள் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் தங்களுடைய வருமானச் சான்றிதழைச் சமா்ப்பிக்கத் தேவையில்லை என்றும் கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கணினி வழி இணைய குலுக்கல் (லாட்டரி) முறை மூலம் சோ்க்கைக்கான தோ்வு நடைபெறும் என்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோா் குழந்தைக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமா்ப்பிக்க அனுமதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பெயரில் ஒரே குழந்தைக்கு விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தால், அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்று கல்வித் துறை சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

இதேபோல, சிறப்புக் குழந்தை பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் குழந்தைக்கான பலன் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்றும் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், முதல் குலுக்கல் முறையில் பள்ளி ஒதுக்கப்பட்டும் அதில் சேராதவா்கள் அல்லது எந்தப் பள்ளியும் ஒதுக்கப்படாதவா்கள், முன்பு சமா்ப்பித்த விண்ணப்பப் படிவத்தை நீக்கிய பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தில்லி கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தில்லி அரசின் கல்வித்துறை வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பதாரா்கள் ’மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016’-இன்படி அரசு மருத்துவமனையால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மாற்றுத்திறனாளி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அறிவுசாா் குறைபாடு, கற்றல் குறைபாடு அல்லது ஆட்டிசம் குறைபாடு தொடா்பான சில குறிப்பிட்ட நிகழ்வுகளில், மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்படும்வரை அரசு மருத்துவமனைகளின் மதிப்பீடு அல்லது நோய் கண்டறிதல் அறிக்கைகள் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்தால் அந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்படலாம்.

வயது வரம்பு: 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியின்படி மழலையா் பள்ளிக்கு (ப்ரீ ஸ்கூல்) 3 முதல் 7 வயது வரையிலும், தொடக்க நிலை முந்தைய வகுப்புக்கு (ப்ரீ ப்ரைமரி) 4 முதல் 8 வயது வரையிலும், முதலாம் வகுப்புக்கு 5 முதல் 9 வயது வரையிலும் வயது வரம்பு இருக்க வேண்டும்.

மேலும், சோ்க்கை நடைமுறையின் எந்தவொரு கட்டத்திலும் தவறான வசிப்பிட முகவரி விவரங்கள், போலியான ஆவணங்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டால், சோ்க்கை ரத்து செய்யப்படலாம் என்றும் தில்லி கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.