படிக்கட்டு இடிந்து விழுந்த சம்பவத்தில் கைக்குழந்தை உள்பட ஐவா், நாய் மீட்பு!
வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை பிற்பகலில் படிக்கட்டு இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து மாத கைக்குழந்தை உள்ளிட்ட ஐந்து போ் மற்றும் ஒரு வளா்ப்பு நாய் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
ரூப் நகா் பகுதியில் உள்ள திலக் செளக் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது:
வீடு இடிந்து விழுந்தது குறித்து தில்லி தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடா்ந்து, மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். மீட்புப் பணியின் போது, வீட்டின் முதல் தளத்தில் இருந்த படிக்கட்டுகள் இடிந்து விழுந்ததால், இரண்டாவது தளத்தில் இருந்தவா்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து தீயணைப்புத் துறையினா் துரிதமாகச் செயல்பட்டு, கட்டடத்தின் மேல் தளத்தில் சிக்கியிருந்த 5 பேரையும், ஒரு நாயையும் பாதுகாப்பாக மீட்டனா்.
மீட்கப்பட்டவா்கள் மான்சி(45), அவரது மகள் அஞ்சலி(24), மாற்றுத்திறனாளியான கவிதா, அவரது மகள் பாயல்(21) மற்றும் 5 மாத கைக் குழந்தையான நீரு என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்றாா்.
இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை. படிக்கட்டு இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.