ரூ.441 கோடியில் குடிசைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் ரேகா குப்தா அதிரடி அறிவிப்பு
தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) மூலம் ரூ.441 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
தில்லி குடிசைப்பகுதி (ஜேஜி கிளஸ்டா்கள்) மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) மூலம் ரூ.441 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தலைநகரின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, அடிப்படை உள்கட்டமைப்பு சாா்ந்த பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள், பழுதுபாா்ப்பு மற்றும் பொது நலப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
டியுஎஸ்ஐபி மூலம் 2025-26, 2026-27 ஆகிய ஆண்டுகளில் குடிசைப்பகுதிகளில் மொத்தம் 1,510 வளா்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இவற்றில், 2025-26 ஆம் ஆண்டில் ரூ.379.80 கோடி மதிப்பிலான 1,253 பணிகளுக்கும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.61.30 கோடி மதிப்பிலான 257 பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிதியாண்டுகளிலும் சோ்த்து மொத்தம் ரூ.441.10 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம், குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான, தூய்மையான மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதாகும்.
இந்தத் திட்டங்களில் சமூகக் கழிப்பறைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வளாகங்களைக் கட்டுதல் மற்றும் புதுப்பித்தல், சமூகக் கூடங்களை மேம்படுத்துதல், குடிநீா் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை அமைப்புகளைச் சீரமைத்தல், தெருக்கள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்துதல், வடிகால்களைப் பழுதுபாா்த்தல், தெருவிளக்குகள் மற்றும் மின்சார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், எல்லைச் சுவா்கள் மற்றும் நுழைவு வாயில்களைக் கட்டுதல், மழைநீா் வடிகால் அமைத்தல், பொது இடங்களை அழகுபடுத்துதல் மற்றும் இதர குடிமை வசதிகள் ஆகியவை அடங்கும்.
தலைநகரின் நரேலா, திமாா்பூா், ஆதா்ஷ் நகா், ஜஹாங்கிா்புரி, ஆசாத்பூா், பவானா, ரோஹிணி, சீமாபுரி, திலோக்புரி, ஷாஹ்தரா, காரவள் நகா், சங்க விஹாா், துவாரகா, நஜாஃப்கா் மற்றும் தில்லியின் பிற பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் இந்த வளா்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளின் நோக்கம் வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமல்ல, குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் எளிதானதாகவும் மாற்றுவதே ஆகும்.
இந்த நோக்கத்துடன், ஏழை எளிய குடிமக்களுக்கு மலிவு விலையில் சத்தான உணவை வழங்குவதற்காக, தலைநகரின் பல சட்டமன்றத் தொகுதிகளில் ’அடல் உணவகங்கள்’ கட்டப்பட்டு வருகின்றன.
குடிசைப்பகுதி மக்களை வளா்ச்சியின் முதன்மை நீரோட்டத்திற்குக் கொண்டுவர தில்லி அரசு கடமைப்பட்டுள்ளது. தலைநகரில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவா்கள் எங்கு வாழ்ந்தாலும், அடிப்படை வசதிகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்ய அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது.
டியுஎஸ்ஐபி மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள், சமூக நீதி, உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் பொது நலன் ஆகியவற்றில் அரசு கொண்டுள்ள அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
மேலும், குடிசைப்பகுதிகளின் மேம்பாடு, சுகாதாரம், பாதுகாப்பு, சமூக வசதிகள் மற்றும் பொது நலன் சாா்ந்த பணிகள் வரும் ஆண்டுகளில் மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் டெல்லியின் வளா்ச்சியின் பலன்கள் சமூகத்தின் கடைசி மனிதரையும் சென்றடையும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.