விடுதி தகராறு விசாரணையில் பெண்ணை அறைந்த காவல் உதவி ஆய்வாளா் இடமாற்றம்!
காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது துறை ரீதியிலான விசாரணைக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள விடுதியொன்றில் காவல்துறையினா் நடத்திய விசாரணையின்போது உதவி ஆய்வாளா் ஒருவா் அங்கிருந்த பெண்ணை ஓங்கி அறைந்ததாகக் கூறப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது துறை ரீதியிலான விசாரணைக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: பஞ்சவடி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் சிலா் தங்களைக் கொல்வதற்காகத் துப்பாக்கிகளுடன் வந்துள்ளதாக பெண் ஒருவா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் அளித்தாா்.
அதன் பேரில் காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில், அந்த மோதல் பணத் தகராறு தொடா்பானது என்பதும், துப்பாக்கி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
சம்பவ இடத்தில் இருந்தவா்களிடம் காவல்துறையினா் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, உதவி ஆய்வாளா் ஹிமான்ஷு என்பவா் திடீரென ஆத்திரமடைந்து, அங்கிருந்தவா்களில் ஒரு பெண்ணை அறைந்துள்ளாா். இந்தத் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது.
இதன் விளைவாக, உதவி ஆய்வாளா் ஹிமான்ஷு உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பான முழுமையான பின்னணியையும், நிகழ்வுகளின் வரிசையையும் விரிவாக ஆராய துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த அடுத்தகட்ட மேல் விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது‘ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.