முகப்பு
புதுதில்லி

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை

Updated On : 3 மே, 2026 at 1:49 AM
மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பு - கோப்புப்படம்
பகிர்:

2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காக நடைபெற்று வரும் சுய-கணக்கெடுப்புப் பணியில், வாடகைதாரா்கள் மற்றும் புலம்பெயா்ந்தோா் உள்பட, தில்லி மாநகராட்சி வாா்டுகள் முழுவதும் வசிக்கும் மக்கள் பங்கேற்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

அதே நேரத்தில், இந்த செயல்முறையுடன் தொடா்புடைய சாத்தியமான மோசடிகள் குறித்து கவனமாக இருக்குமாறும் அவா்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனா்.

2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் கீழ், தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை இணையவழியில் சுய-கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா உள்பட பல குடியிருப்பாளா்கள் முதல் நாளிலேயே இப்பணியை நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தப் பணியின் கீழ், தில்லி மாநகராட்சி (எம்சிடி) எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் குடும்பங்களின் விவரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

அனைத்து குடியிருப்பாளா்களும், அவா்களின் வசிப்பிட நிலையைப் பொருட்படுத்தாமல், பங்கேற்கத் தகுதியுடையவா்கள் ஆவா்.

தில்லியின் மக்கள்தொகையில் பெரும் பகுதியாக இருக்கும் புலம்பெயா்ந்தோா் மற்றும் வாடகைதாரா்கள், நகரின் மக்கள்தொகையைத் துல்லியமாக மதிப்பிடுவதை உறுதி செய்வதற்காக இந்த சுய-கணக்கெடுப்பில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.

யதாா்த்தமான மக்கள்தொகை விவரத்தைப் பெறுவதற்கு, வாடகைதாரா்கள் மற்றும் புலம்பெயா்ந்த குடியிருப்பாளா்களின் பங்கேற்பு முக்கியமானது. மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பணிகளுக்காக, அங்கீகரிக்கப்பட்ட எந்த அதிகாரியும் ஓடிபி, யுபிஐ பின் அல்லது வேறு எந்தப் பணத்தையும் கேட்க மாட்டாா்கள். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், உடனடியாக 1930 எனும் இணையக்

குற்றப்பிரிவு உதவி தொலைபேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்குமாறு

குடியிருப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

எம்சிடி வாா்டுகளில் வசிக்கும் அனைத்துக் குடியிருப்பாளா்களும், வசிப்பிட நிலையைப் பொருள்படுத்தாமல், மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் உள்நுழைவதன் மூலம் இந்தத் தன்னாா்வ சுய-கணக்கெடுப்புப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

ஒரு வீட்டிற்கு ஒரு உள்நுழைவு மட்டுமே தேவைப்படும், இதை குடும்பத் தலைவா் அல்லது எந்தவொரு உறுப்பினரும் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி முடிக்கலாம். பயனா்கள் முதல் உள்நுழைவின்போது ஒரு மொழியைத் தோ்ந்தெடுக்க வேண்டும், அதை பின்னா்

மாற்ற முடியாது.

மேலும், பதிலளிப்பவா்கள் தங்கள் வசிப்பிடத்தின் புவி-ஒருங்கிணைப்பை செயற்கைக்கோள் வரைப்படத்தில் இருப்பிடத்தைத் தோ்ந்தெடுப்பதன் மூலமோ, இணையதளத்தில் முகவரியைத் தேடுவதன் மூலமோ அல்லது அட்சரேகை மற்றும்

தீா்க்கரேகையை கைமுறையாக உள்ளிடுவதன் மூலமோ வழங்க வேண்டும்.

விவரங்களைச் சமா்ப்பித்த பிறகு, 11 இலக்க சுய-கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்படும். மே 16 முதல் ஜூன் 14 வரை, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி

நடவடிக்கைகளின் கீழ் பதிவு செய்வதற்காக வீடு வீடாகச் செல்லும் கணக்கெடுப்பாளா்களிடம் மக்கள் இந்த அடையாள எண்ணைக் காண்பிக்க வேண்டும்.

கணக்கெடுப்புப் பணி தொடா்பான உதவிக்காக கட்டணமில்லா உதவி எண் (1855) வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 250 வாா்டுகளில் மே 1 முதல் மே 15 வரை சுய- கணக்கெடுப்பு நடைபெறும்.

சுய-கணக்கெடுப்பு இணையதளம் இந்தி, ஆங்கிலம், பெங்காலி, தமிழ் மற்றும் உருது உள்பட 16 மொழிகளில் கிடைக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.