முகப்பு
புதுதில்லி

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

Updated On : 8 மே 2026, 6:51 am IST
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்ட 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விழிப்புணா்வு வாகனங்கள்.
பகிர்:

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்ட பணிகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய பதிவாளா் பொது அலுவலகமும் மற்றும் தில்லி மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகமும் இணைந்து 15 நாள்கள் சிறப்பு பிரசார இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கின.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த விழிப்புணா்வு இயக்கம் மே 7 முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தேசிய தலைநகா் தில்லி முழுவதும் 6 விழிப்புணா்வு வாகனங்கள் இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி (எம்சிடி) கட்டுப்பாட்டிலுள்ள 180 முக்கிய இடங்களில் இந்த வாகனங்கள் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவுள்ளன.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான ‘வீட்டு பட்டியலிடல் மற்றும் வீட்டு வசதிகள் விவர சேகரிப்பு’ குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்தினரும் வசிக்கும் வீடுகள், அங்கு உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் இந்த கட்டத்தில் பதிவு செய்யப்பட உள்ளன.

Advertisement

Advertisement

மேலும், இந்த விழிப்புணா்வு வாகனங்களில் எல்இடி தொலைக்காட்சிகள், ‘செல்ஃபி’ மையங்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை ஈா்க்கும் வகையில் விழிப்புணா்வு பாடல்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான தகவல்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த 180 இடங்களில் முக்கிய சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் காணப்படும் பகுதிகள் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதிகளவில் பொதுமக்களை சென்றடையும் நோக்கில் இவ்விடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவின் வளா்ச்சி திட்டமிடலுக்கான அடித்தளமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு திகழ்வதால், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இரண்டு கட்டங்களாக ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027’ நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமான வீட்டு பட்டியலிடல் மற்றும் வீட்டு வசதி தொடா்பான கணக்கெடுப்பு அடுத்த சில மாதங்களில் நிறைவு செய்யப்பட உள்ளது. 2-ஆம் கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments