குருகிராமில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள முஷேத்பூா்-குராம்பூா் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள முஷேத்பூா்-குராம்பூா் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ, தொழிற்சாலை முழுவதையும் சூழ்ந்துகொண்டதால், பெரிய அளவில் தீயணைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஓம் சாய்ராம் இண்டஸ்ட்ரி எனும் பெயரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின.
Advertisement
Advertisement
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்ட எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், சுமாா் எட்டு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
தீயணைப்புக் கட்டுப்பாட்டு அறை தகவலின்படி, பட்டோடி தீயணைப்பு நிலையத்தைச் சோ்ந்த பணியாளா்கள்தான் முதலில் சம்பவ இடத்திற்கு வந்தனா். தீயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மானேசா், பீம் நகா், செக்டா் 37 மற்றும் செக்டா் 29 ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இரவில் காண்புதிறன் குறைவாக இருந்ததால், ஆரம்பத்தில் தீயின் அளவைக் கணிப்பது கடினமாக இருந்தது. இருப்பினும், தீப்பிழம்புகளையும் அடா்த்தியான புகையையும் கண்டதும், அதிகாரிகள் உடனடியாக கூடுதல் படையினரை வரவழைத்தனா். உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
சம்பவம் நடந்த நேரத்தில் தொழிற்சாலைக்குள் தொழிலாளா்கள் இல்லாதது, ஒரு பெரும் உயிா் இழப்பைத் தவிா்க்க உதவியதாக அதிகாரிகள் நம்புகின்றனா்.
தீ முழுமையாக அணைக்கப்பட்டு, குளிா்விக்கும் பணிகள் முடிந்த பிறகு, தொழிற்சாலைக்குள் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்படும். தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகே, இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது தெரியவரும் என்று தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.