சங்க இலக்கிய மாண்பு
சங்க இலக்கிய மாண்பு - இரா.மோகன்; பக்.186; ரூ.85; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.
சங்க இலக்கிய மாண்பு - இரா.மோகன்; பக்.186; ரூ.85; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.
நற்றிணையின் நயம் குறித்து நான்கு, நல்ல குறுந்தொகை குறித்து ஒன்பது, ஐங்குறுநூற்றுச் செவ்வி குறித்து மூன்று, கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகைக்கு இரண்டு, அகநானூற்று மாண்பு குறித்து நான்கு, புறநானூற்று சிறப்பு குறித்து ஒன்பது, சங்கச் சான்றோரின் தனித்திறன் குறித்து ஆறு - ஆக மொத்தம் சங்க இலக்கியத்தின் மாண்பு கூறும் 35 கட்டுரைகளின் தொகுப்பு.
ஒவ்வொரு கட்டுரையின் முகப்பையும் தெ.பொ.மீ., ரா.சீனிவாசன், சி.இலக்குவனார், வ.சுப.மாணிக்கம், அ.சிதம்பரநாதன், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், தனிநாயக அடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழண்ணல், ந.சஞ்சீவி, தெ.ஞானசுந்தரம் முதலான தமிழ்ச் சான்றோர்களின், அந்தந்த இலக்கியங்கள் பற்றிய பொன்மொழிகள் அலங்கரித்துள்ளன.
Advertisement
Advertisement
""இறைவனே! உன் திருவடிகள் தவிர எனக்குப் புகலிடம் வேறு இல்லை. பெற்ற தாய் சினம் கொண்டு நீங்கினாலும், அவளுடைய அன்பையே நினைந்து அழும் குழந்தை போல் இருக்கிறேன்'' என வித்துவக்கோட்டு அம்மானிடம் உளமுருகி உரைக்கும் குலசேகர ஆழ்வாரின் கூற்று, "தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு, அன்னாய் என்னும் குழவி போல, இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், நின் வரைப்பினள் என் தோழி!' என அம்மூவனாரின் குறுந்தொகைத் தோழியினது கூற்றின் எதிரொலியாக விளங்குவதைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
இவ்வாறு சங்க இலக்கியங்கள் பலவற்றை பக்தி இலக்கியங்களோடும் பிற இலக்கியங்களோடும் ஒப்புநோக்கி விளக்கியுள்ளார். படித்தால் இன்பம் தருவதல்ல சங்க இலக்கியம்; படிக்கப் படிக்க இன்பம் தந்துகொண்டே இருப்பதுதான் சங்க இலக்கியம் என்பதை சங்க இலக்கியத்தில் ஆழங்காற்பட்டவரான நூலாசிரியரின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிப்படுத்துகிறது. படித்து மகிழ வேண்டிய வாழ்வோவியங்கள் - வாழ்வியல் விழுமியங்கள்!