பூமராங் சிறுகதைகள்
அவள் ஒரு தொடர்கதை என்கிற திரைக்காவியத்தின் மூலக் கதாசிரியரின் சிறுகதை தொகுப்பு இது.
பூமராங் சிறுகதைகள்-எம்.எஸ். பெருமாள்; பக். 160; ரூ. 200; முத்துநாடு பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 096, 044- 2496 0231.
அவள் ஒரு தொடர்கதை என்கிற திரைக்காவியத்தின் மூலக் கதாசிரியரின் சிறுகதை தொகுப்பு இது.
எளிமையான மொழி நடை, ஆழமான கருத்துகள், எல்லோரும் வாசித்து பயணிக்கும் வகையிலான கதைக் களம் என அமைந்து கதைகளின் கருவும், அதில் வரக்கூடிய கதை மாந்தர்களும் காட்சி அமைப்புகளும் பின்னப்பட்டிருக்கின்றன.
Advertisement
எளிய மனிதர்களின் உரையாடல்களை நேரடியாக அர்த்தம் கொள்ளாமல் அவர்களின் மன அடுக்குகளில் இருக்கக்கூடிய ஆழ்ந்த உண்மைகளை வாசகனுக்கு புரியும்படி அந்த உரையாடல்கள் நிகழ்கின்றன.
ஒவ்வொரு சிறுகதையின் முடிவும் எதிர்பாராத திருப்பங்களுடன் சிறுகதையின் இலக்கணத்துக்கு ஏற்றதுபோல் முடிவடைகின்றன. மேலும், ஒரு படைப்பு என்பது இன்னொரு படைப்புக்கான தூண்டுதலாக இருக்கும் விதத்தில் அமைய வேண்டும்; அதுதான் அந்தப் படைப்பின் வெற்றி. சிறுகதைகளை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களையும், நம்மிடையே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக்கூட நாமும் ஒரு சிறுகதையாக உருப்பெற வைக்கலாம் என்கிற ஓர் உத்வேகத்தைத் தருகின்றன இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிக்கும் சிறுகதைகள்.
சின்னஞ்சிறு கதைகள்- சிறுகதைகள்- நெடுங்கதைகள் என மொத்தம் 12 கதைகள் தொகுப்பில் உள்ளன. சிறுகதைகளை வாசிக்கும்போது வாழ்வில் வீசும் திடீர் புயலுக்கும், திட்டமிட்ட சூழ்ச்சிகளுக்கும், எதிர்பாராத சிக்கல்களுக்கும் யாரோ ஒருவர் விட்டுக்கொடுக்காததுதான் காரணமாக இருக்கக்கூடும் என்கிற தெளிவு பிறக்கிறது. உணர்வுபூர்வமாக செயல்படாமல் அறிவுபூர்வமாக செயல்பட்டாலே வாழ்வு அர்த்தம் பொதிந்ததாக மாறும் என்கிற உண்மையை கதை மாந்தர்கள் புரிய வைக்கிறார்கள்.
அந்தப் புரிதல்தான் இந்தத் தொகுப்பின் வெற்றி.