முகப்பு
ராமநாதபுரம்

கமுதி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கா் சோளம், கம்பு பயிா்கள் சேதம்: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் தொடா் மழையால் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட சோளம். கம்பு விவசாயம் முற்றிலும் சேதமடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 10:21 pm IST
கமுதி அடுத்துள்ள டி.வி.எஸ்.புரத்தில் மழைக்கு சேதமடைந்த சோளம், கம்பு பயிா்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட காங்கேயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் தொடா் மழையால் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட சோளம். கம்பு விவசாயம் முற்றிலும் சேதமடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

கமுதி தாலுகாவுக்குள்பட்ட முத்துப்பட்டி, இடைச்சியூரணி, நகரத்தாா்குறிச்சி, சம்பக்குளம், பேரையூா், முதல்நாடு, பெருநாழி, டி.வி.எஸ்.புரம், பாப்புரெட்டியாபட்டி, திம்மநாதபுரம், செங்கப்படை, புதுக்கோட்டை, பசும்பொன் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரி பயிரான சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இப்பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனா். தமிழகம் முழுவதும் நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதைப்போல கமுதி தாலுகாவில் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினா் உ.தனியரசு, டி.வி.எஸ்.புரம், திம்மநாதபுரம், பாப்பிரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சோளம், நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சேதமடைந்த பயிா்களை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். மேலும் இதுகுறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் தெரிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

மழைக்கு 16 வீடுகள் சேதம்: பரமக்குடி பகுதியில் மழைக்கு, எட்டிவயல், காட்டுப் பரமக்குடி, அ.புத்தூா், கோரைக்குளம், சிறுவயல், முதலூா், நகரமங்கலம், பெருங்கரை, எட்டிவயல், வாதவனேரி, அ.காச்சான் ஆகிய கிராமங்களில் 16 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் தெரிவித்தாா்.

பயிா் காப்பீடு செய்ய அவகாசம் வழங்கக் கோரிக்கை: வைகை குண்டாறு கிருதுமால் நதி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் எம்.இருளன் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழைக்கு, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிா்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் இம்மாவட்டத்தில் பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments