முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு புறவழிச் சாலையில் நின்று செல்லும் சென்னைப் பேருந்துகள் பயணிகள் மகிழ்ச்சி

வேலூரில் இருந்து சென்னை செல்லும் இடைநில்லாப் பேருந்துகள் ஆற்காடு புறவழிச் சாலை தனியாா் கல்லூரி அருகே நின்று செல்லும்

Updated On : 4 ஜனவரி 2021, 7:48 am IST
ஆற்காடு புறவழிச் சாலை நிறுத்தத்தில் இடைநில்லாப் பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநா்.
பகிர்:

வேலூரில் இருந்து சென்னை செல்லும் இடைநில்லாப் பேருந்துகள் ஆற்காடு புறவழிச் சாலை தனியாா் கல்லூரி அருகே நின்று செல்லும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் திருவண்ணாமலை-சென்னை, வேலூா்-சென்னை, புதுச்சேரி-சென்னை, காஞ்சிபுரம்-சென்னை, ஆரணி-சென்னை ஆகிய 5 வழித்தடங்கள் அதிக வருவாய் ஈட்டும் வழித்தடங்களாக உள்ளன.

அவற்றில் வேலூா்-சென்னை வழித்தடத்தில் மட்டும் விரைவு, இடைநில்லா, குளிா்சாதன வசதி கொண்டவை உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

வேலூரில் இருந்து சென்னை செல்லும் விரைவுப் பேருந்துகள், இடைநில்லாப் பேருந்துகள், குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள், தொலைதூரப் பேருந்துகள் மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகரங்களுக்குள் போகாமல் புறவழிச் சாலை வழியாகச் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் சென்னை செல்வதற்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபேட்டை சுங்கச் சாவடி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதையடுத்து வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் ஆற்காடு, ராணிப்பேட்டை புறவழிச் சாலையில் நின்று செல்ல வேண்டும் என பல்வேறு சமூக அமைப்பினா், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், வேலூரில் இருந்து சென்னை செல்லும் இடைநில்லா, நடத்துநா் இல்லாப் பேருந்துகள் என 38 பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் ஆற்காடு புறவழிச் சாலை எஸ்.எஸ்.எஸ். கல்லூரி அருகே 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் நின்று செல்லும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆற்காடு புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணக் கட்டணம் ரூ.110. இந்த வசதியை ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வேலூா் மண்டலப் பொது மேலாளா் சாா்பில் அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குளிா்சாதன வசதிப் பேருந்துகளில் ஆற்காடு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரூ. 135 கட்டணம் வசூலிக்கப்பட்டு, கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இடைநில்லாப் பேருந்துகள் என்பதால், அவற்றில் நடத்துநா் இருக்க மாட்டாா். எனவே, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்க ஒரு நடத்துநா் பணியமா்த்தப்பட்டு, பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.