பரிகாரத் தலங்கள்

துன்பங்கள் நீங்கி நன்மைகளைப் பெருக்கும் தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அனலாடீசுவரர் திருக்கோயில், துன்பங்களை நீக்கி  நன்மைகளைப் பெருக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

வாழை உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற தொட்டியம், திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 53 கி.மீ. தொலைவு கொண்ட தொட்டியம் நகரிலுள்ள இக்கோயிலில் பஞ்சபூத லிங்கங்களும் அமைந்திருப்பது தனிச் சிறப்புக்குரியது. மேலும் சப்த கன்னிகள் வழிபட்டது, பிரம்மன் செய்த யாககுண்டமே தீர்த்தமாக விளங்குவது போன்றவையும் இக்கோயிலின் சிறப்பாக அமைந்துள்ளது.

நுழைவு வாயில்

பிரம்மன் யாகம் செய்ததால் பிரம்மபுரம் என்றும், மத்திய மலையை அடுத்துள்ளதால் மத்தியாசல சேத்திரம் என்றும், திரிபுரங்களையும் அழித்த காரணத்தால் திரிபுர சம்ஹார சேத்திரம் என்றும் தொட்டியம் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் செய்த அட்ட வீரட்டங்களில் எட்டு வீர செயல்களில் திரிபுர தகனமும் ஒன்று. அது இத்திருக்கோயிலில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சூரியனார் கோயிலில் நடைபெறுவது போன்று, காரண ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

 உள் பிரகார கோபுரம்

கோயிலின் தல வரலாறு 

தாராசூரன் என்ற அரக்கனுக்கு வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூன்று புதல்வர்கள் இருந்தனர். தங்களது வம்சாவளி தொழிலான தேவர்கள், மனிதர்களைத் துன்புறுத்தும் பணியை அவர்களும் தொடர விரும்பினர். இதற்காகக் கடுமையான தவம்புரிந்து, பிரம்மனிடம் வரங்களை மூவரும் பெற்றனர். அதன் வாயிலாக பொன் மற்றும் வெள்ளியால் ஆன அரண்களையும் அமைத்துக் கொண்டனர்.

அனலாடீசுவரர் சுவாமி

மேலும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தன்மைகளைக் கொண்டவர்களாய், பல இடங்களுக்கும் பறந்து சென்று மூவுலகங்களையும் இந்த மூவரும் துன்பத்தில் ஆழ்த்தினர். அந்தத் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

நந்தியெம்பெருமான்

அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திர-சூரியரரை குதிரைகளாகவும், பிரம்மனை சாரதியாகவும், மகாமேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை வில் நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிறகாக அமைத்து, அக்னியை முனையாகக் கொண்டாக அம்பாகவும், மற்ற தேவர்களைப் போர்க் கருவிகளாகவும் கொண்டு போர்க்கோலத்துடன் புறப்பட்டார்.

கோயில் வெளிப் பிரகாரம்

அங்கு மூன்று அசுரர்களுடன் போரிட்டு,  அவர்களின் அரண்களை முதலில் அழித்து, பின்னர் அவர்களை சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். அப்போது சிவபெருமான் விட்ட அம்பின் பொறி தொட்டுச் சென்ற இடங்களில் ஒன்று துஷ்டபுரியம் என்றழைக்கப்பட்டு வந்தது. துஷ்டர்களை (சத்ருக்கள்) நிவர்த்தியாகும் பொருட்டு  துஷ்டபுரியம் என்றழைக்கப்பட்ட இந்த ஊர், தற்போது மருவி தொட்டியம் என்றழைக்கப்படுகிறது.

 நிர்த்த கணபதி

இறைவன் அனலாடீசுவரர்

முனிவர்களின் வேண்டுகோளின்படி, சிவபெருமான் திரிபுரம் சம்ஹாரத்துக்குப் புறப்பட்டு வந்த போது, இந்த திருக்கோயிலில் பிரம்மன் யாகம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் வடமொழியில் அக்னி நர்த்தீசுவரர் என்று அழைக்கப்பட்டார்.

அன்னாபிஷேக அலங்காரத்தில் அனலாடீசுவரர் சுவாமி

தற்போது அனலாடீசுவரர்  என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். பிரம்மன் நடத்திய யாக குண்டமே தற்போது அம்மன் சன்னதி முன்பு தீர்த்தமாக உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டுள்ள இந்த இறைவனை வழிபட்டால் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி, நன்மைகளும் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குமாரமுருகன்

இறைவி திரிபுரசுந்தரி அம்மன்

இறைவன் அனலாடீசுவரரை போன்று, இறைவி திரிபுரசுந்தரி அம்மனும் கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

திரிபுரசுந்தரி என்றால் தமிழில் அழகு உடையவர் என்று பொருள். அதாவது அழகுடையவராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும் இறைவியாக அம்மன் திகழ்கிறார். சந்திர ரூபமாக அம்மன் காட்சியளிப்பதால், இக்கோயிலில் சந்திரன் கிடையாது. சூரியன் மட்டுமே எழுந்தருளியுள்ளார்.

ஈசுவர தீர்த்தம்

ஈசுவரத் தீர்த்தம் 

பிரம்மன் செய்த யாக குண்டமே தற்போது ஈசுவரத் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இறைவி திரிபுரசுந்தரி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது. நாள்தோறும் அம்மனுக்கு நடைபெறும் உச்சிக்காலப் பூஜையின் போது, பக்தர்களுக்கு ஈசுவரத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

அனலாடீசுவரர் சுவாமி திருக்கோயில் உள் மண்டபப் பகுதி

அருள்மிகு அனலாடீசுவரர் சுவாமி, திரிபுரசுந்தரி அம்மன் சன்னதிகள் அருகருகே அமைந்து சக்தியும், சிவமுமாகக் காட்சியளிப்பதாலும், சப்த கன்னிகள் வழிபட்டதாலும், பிரம்மன் செய்த யாககுண்டமே தீர்த்தமாக விளங்குவதாலும் இங்குள்ள அம்மனை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்துக்கும் வலிமை சேர்ப்பதுடன், குளிர்ச்சியையும் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த தீர்த்தமே ஒரு காலத்தில் இங்குள்ள மக்களுக்கு பிணி போக்கும் மருந்தாக இருந்து வந்துள்ளது. ஈசுவரத் தீர்த்தம் பெறுவதால் திருமணத் தடை, குழந்தையின்மை, உடல்நலக் கோளாறுகள் நீங்கி, கல்வி, செல்வம் மற்றும் வாழ்வில் நன்மைகள் பெருகும்.

முருகன் சன்னதிக்கு எதிரே எழுந்தருளிய மயில்

பஞ்சபூத லிங்கங்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் சுவாமி திருக்கோயிலைப் போன்று, தொட்டியம் அருள்மிகு அனலாடீசுவரர் சுவாமி திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் பஞ்சபூத லிங்கங்களும் அமைந்துள்ளன. இறைவன் அனலாடீசுவரர், அவரது சன்னதியின் பின்பகுதியில் பிரதிவிலிங்கம், அப்புலிங்கம் என கோயிலுக்குள்பட்ட பகுதியில்  பஞ்சபூத லிங்கங்கள் அமைந்திருப்பதும் தனிச் சிறப்புக்குரியது.

சூரியன்

இறைவன் சன்னதி மண்டபத்தை அடுத்து வெளியே அமைந்துள்ள மண்டபத்தில் கன்னிமூல விநாயகர், அருள்மிகு வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர், அருள்மிகு பஞ்சாபகேசுவரர்- பர்வதவர்தினி அம்மன், லட்சுமி, நவக்கிரகங்கள்,  இறைவனின் தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது.  

பிரம்மா

குழந்தைப் பாக்கியம் அருளும் சுப்பிரமணியர் 

வள்ளி-தேவசேனா சமேதராய் அருள்மிகு சுப்ரமணியசுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள முருகனுக்கு ஆறு மாதங்கள் தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்து, தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத் தடையுள்ளவர்கள் சுப்பிரமணியருக்கு செவ்வரளியைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் உரிய பலன்கள் கிடைக்கும். ஆடி, தை மாதக் கிருத்திகைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமணியர் 

சிறப்பு வாய்ந்த நவக்கிரகங்கள்

இக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு பின்புறம் நவக்கிரகங்கள் அமைந்திருப்பது தனிச் சிறப்புக்குரியது. குரு பகவான் அனுக்கிரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சனி மட்டும் தனியாக சூரியனை வழிபட, மற்ற கிரகங்கள் சூரியனை நோக்கியவாறு உள்ளன. சூரியனார் கோயிலில் நடைபெறுவது போன்று இக்கோயிலிலும் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சப்த கன்னிகள்

உயரமான பைரவர் 

மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு உண்டு. மிக உயரமான அளவில் பைரவர் இங்கு எழுந்தருளியுள்ளார். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டால் பில்லி, சூனியம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பைரவர்

திருவிழாக்கள்

அனலாடீசுவரர் திருக்கோயிலில் வைகாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். சுவாதியில் தேர், விசாகத்தில் தீர்த்தவாரி என்பர். இத்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இதைத் தவிர புரட்டாசி மாதத்தில் 9 நாள்களும் நவராத்திரி விழா,  ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா போன்றவையும் நடைபெற்று வருகின்றன.

அப்புலிங்கம்

எப்படிச் செல்வது? 

திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயிலுக்கு டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வர வேண்டுமெனில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், நெ.1.டோல்கேட், சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், அய்யம்பாளையம், முசிறி, மணமேடு, சீனிவாசநல்லூர், மகேந்திரமங்கலம் வழியாக தொட்டியம் வந்தடையலாம்.

பஞ்சாபகேசுவரர் உடனுறை பர்வதவர்தினி

சென்னை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நெ.1.டோல்கேட் வந்து, அங்கிருந்து சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், முசிறி, மணமேடு, சீனிவாசநல்லூரர், மகேந்திரமங்கலம் வழியாக தொட்டியம் வந்து சேரலாம்.

பிரதிவிலிங்கம்

கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குளித்தலை, முசிறி  வழியாக தொட்டியம் வந்து சேரலாம். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது பயண வழித்தடத்திலுள்ள தொட்டியத்தில் இறங்கிக் கொள்ளலாம். தொட்டியம் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து சிறிது தொலைவில் கோயில் உள்ளது. ஆட்டோ மூலமாகவும் கோயிலுக்குச் செல்லலாம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொட்டியம் வழியாக காட்டுப்புத்தூர், பரமத்திவேலூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் தொட்டியம் வரலாம். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்,விமான நிலையத்திலிருந்து கார், வேன் போன்ற வசதிகள் தொட்டியத்துக்கு உள்ளன.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி

தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் பாலசுப்ரமணியன் குருக்களை 9443809636 என்ற கைப்பேசி  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அனலாடீசுவரர் திருக்கோயில்.
தொட்டியம் நகர் மற்றும் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT