வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது.
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. முதல் நாளில் கல் இழைத்த நேர் கிரீடம், பங்குனி உத்திர பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து நம் பெருமாள் காட்சியளித்தார்.
108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
திருமொழித்திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் பச்சை பட்டுடுத்தி கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி, சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி, திருமார்பில் - பங்குனி உத்திர பதக்கம், அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் - ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம், சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை, 8 வட முத்து மாலை; வைரக்கல் அபய ஹஸ்தம் - அதில் தொங்கல் பதக்கம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உள் பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
Advertisement
Advertisement
அங்கு ஏராளமான பக்தர்கள் நம் பெருமாளை வழிபாடு செய்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தம் அங்கு பாடப்படுகிறது. நாள் முழுவதும் அர்ஜுன மண்டபத்தில் காட்சி தரும் எம்பெருமாள் இரவு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார்.
வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.