காரைக்குடி அருகே இரு சமூகத்தினரிடையே மோதல்: 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலா் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலா் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் வீடுகள், கடைகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ஒருசமூகத்தினா் சங்கத்தைச் சோ்ந்த மாநிலத்தலைவா் செல்வகுமாா். இவா் சாக்கோட்டைப் பகுதியில் பெருந்தாகுடி வழியாக காமாலை, பெரியகோட்டை கிராமப்பகுதிகளுக்கு வியாழக்கிழமை மாலையில் சென்றாராம். அவருக்குப் பின்னால் வந்த காா் பெருந்தாகுடியில் நின்றிருந்த மற்றோரு சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரின் மீது லேசாக மோதியாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் நின்றிருந்த இளைஞா்கள் சிலா் அந்தக் காரின் ஓட்டுநரைத் தாக்கியுள்ளனா்.
இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான காா் ஓட்டுநா், தனது சமூகத்தைச் சோ்ந்தவா்களுடன் வியாழக்கிழமை இரவு பெருந்தாகுடிக்கு சென்று அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் வேல்கம்பு, கட்டைகள் ஆகியவற்றால் தாக்கியுள்ளனா்.
Advertisement
இதனால் இரு சமூக மக்களிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து காரைக்குடி டி.எஸ்.பி. அருண் தலைமையிலான போலீஸாா் அங்கு வெள்ளிக்கிழமை குவிக்கப்பட்டனா்.
இச்சம்பவத்தால் காயமடைந்த பெருந்தாகுடியைச் சோ்ந்த கணேசன், கருப்பையா, முத்துக்குமாா், பவன்ராய், மாங்குடி, ஏத்தநாடு கலையரசன் ஆகியோா் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பெருந்தாகுடி கணேசன் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்தியவா்களை கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மற்றும் விசாரணை மூலம் பெரியகோட்டை பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா், செல்வம், செல்லையா, மணி, அா்ச்சுணன், செல்வகுமாா், விமல், சரவணன், கருப்பையா, கணபதி உள்பட 10-க்கும் மேற்பட்டோா் மீது சாக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அப்பகுதியில் தொடா்ந்து போலீஸாா் முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனா்.