சேவாக் 95* - டெல்லிக்கு முதல் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 தொடர் தோல்விகளுக்குப் பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 தொடர் தோல்விகளுக்குப் பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை டேர்டெவில்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டேர்டெவில்ஸ் 17 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 165 ரன்கள் எடுத்து வென்றது.
Advertisement
டேர்டெவில்ஸ் வீரர் சேவாக் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ஜெயவர்த்தனே 43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.
பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பையின் டுவைன் ஸ்மித், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்மித் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
5.1 ஓவர்களில் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மும்பை இழந்திருந்தது. இந்த சூழ்நிலையில் சச்சினுடன், ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடியதால் மும்பை அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. 12-வது ஓவரில் சச்சின் அளித்த கேட்சை பந்து வீச்சாளர் நதீம் தவறவிட்டார். அப்போது சச்சின் 37 ரன்கள் எடுத்திருந்தார். இதேபோல மேலும் ஒரு சில அவுட் வாய்ப்புகளை தில்லி வீரர்கள் தவறவிட்டனர்.
இதனை சிறப்பாக பயன்படுத்தி மும்பை வீரர்கள் ரன் குவித்தனர். அதிரடியாக விளையாடி ரோஹித் சர்மா 15-வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தார். அடுத்த ஓவரிலேயே சச்சின் சிக்ஸர் அடித்து 50 ரன்களை எட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 17-வது ஓவரில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து சச்சின் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். அடுத்து போலார்டு களமிறங்கினார்.
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 19-வது ஓவரில், 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 43 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர்களையும், 5 பவுண்டரிகளையும் விளாசி இந்த ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. போலார்டு 19 ரன்களுடனும், ராயுடு 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சேவாக், ஜெயவர்த்தனே அதிரடி: 162 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு டெல்லியின் சேவாக், ஜெயவர்த்தனே ஜோடி களமிறங்கியது. சேவாக் 1 ரன் எடுத்திருந்தபோது கேட்ச் மூலம் அவரை வெளியேற்றக் கிடைத்த வாய்ப்பை மும்பை அணி தவறவிட்டது. இதையடுத்து சேவாக்கும், ஜெயவர்த்தனேவும் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தன. இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
விக்கெட்டை எடுக்க மும்பை அணி எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. 8-வது ஓவரிலேயே சேவாக் 50 ரன்களைக் கடந்தார். மும்பை அணி வீரர்கள் பந்து வீச்சை பலமுறை மாற்றியும் பலன் கிடைக்கவில்லை. 12-வது ஓவரில் ஜெயவர்த்தனே அரைசதம் எடுத்தார். அப்போது டெல்லி அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 114-ஆக இருந்தது.
மலிங்கா வீசிய 16-வது ஓவரின் கடைசி பந்தில் ஜெயவர்த்தனே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. அடுத்து சேவாக்குடன், டேவிட் வார்னர் ஜோடி சேர்ந்தார். 17-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரியை விளாசிய சேவாக் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
டெல்லி அணி 18 பந்துகள் மீதமிருக்கையில் 165 ரன்கள் எடுத்து அதிரடியாக வெற்றி பெற்றது.
சேவாக் 57 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடங்கும். வார்னர் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேவாக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பார்ட்னர்ஷிப் சாதனை: இந்த ஆட்டத்தில் சேவாக் - ஜெயவர்த்தனே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தது. இதுவே இந்த ஐபிஎல் போட்டியில் எந்தவொரு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகும்.
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: இந்த வெற்றியின் மூலம் 6 ஆட்டங்களில் தொடர்ந்து அடைந்த தோல்விக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
6 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை இண்டியன்ஸ் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
வெற்றியைப் பறித்தார் சேவாக்
சேவாக், ஜெயவர்த்தனே ஆகியோரின் அதிரடி ஆட்டம் தங்கள் அணியின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டது என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: எங்கள் அணி எடுத்த 161 ரன்கள் என்பது சிறப்பான ஸ்கோர்தான். ஆனால் சேவாக், ஜெயவர்த்தனே ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றியை அவர்கள் பக்கம் அழைத்துச் சென்றனர். மேலும் இந்த மைதானத்தில் பந்து எதிர்பார்த்த அளவுக்கு "ஸ்விங்' ஆகவில்லை. இதனால் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது என்றார் பாண்டிங்.
விவியன் ரிச்சர்ட்ஸூக்கு சேவாக் நன்றி
டெல்லி அணியின் ஆலோசகரான மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறிய முறைப்படி விளையாடியதால் அதிக ரன்களை எடுக்க முடிந்ததாக சேவாக் கூறியுள்ளார். இதற்காக ரிச்சர்ட்ஸூக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக சனிக்கிழமை விவியன் ரிச்சர்ட்ஸ் இணைந்தார். அதற்கு அடுத்த நாளில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சேவாக் கூறியது: நம்பிக்கையுடன் விளையாடுவது குறித்து விவியன் ரிச்சர்ட்ஸ் அளித்த ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக இருந்தன. அதுவே இன்று எனது ஆட்டத்தில் வெளிப்பட்டது. மேலும் தொடர்ந்து 6 தோல்விகளை அடைந்தபோதிலும், மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இதுவும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சேவாக் கூறினார்.
சுருக்கமான ஸ்கோர்
மும்பை இண்டியன்ஸ் 161/4 (20 ஓவர்களில்)
ரோஹித் சர்மா 73, சச்சின் 54, உமேஷ் யாதவ் 2வி/31)
டெல்லி டேர்டெவில்ஸ் 165/1 (17 ஓவர்களில்)
(சேவாக் 95*, ஜெயவர்த்தனே 59, மலிங்கா 1வி/26)
இன்றைய ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: சென்னை | நேரம்: இரவு 8 மணி