வெளியேறும் சுற்று: ராஜஸ்தான்- ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை
ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் (வெளியேறும்) சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்
ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் (வெளியேறும்) சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. இச்சுற்றில் தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேறும் என்பதால், வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என்பதில் ஐயமில்லை. இப்போட்டி தில்லியில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேர் ஸ்பாட்-பிக்ஸிங்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்று கடைசிப் போட்டியில் அந்த அணி தோல்வியைத் தழுவியது. தங்கள் அணி வீரர்கள் கைது செய்யப்பட்டது அணியின் மற்ற வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இது அணி வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே இந்த ஆட்டம் ராயல்ஸ் வீரர்களுக்கு நிச்சயமாக சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும்.
இரு அணி வீரர்களும் போராடும் தன்மை கொண்டவர்கள். ராயல் அணி பேட்டிங், பந்து வீச்சு என இரு துறைகளிலும் சம பலத்துடன் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன், அணியின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ள அவர், இதுவரை 513 ரன்களைக் குவித்ததுடன், 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Advertisement
இளம் வீரர்கள்கூட ரன் குவிக்கத் தடுமாறி வரும்போது, அணியின் மூத்த வீரராகக் கருதப்படும் கேப்டன் திராவிட் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை அவர் 416 ரன்களைக் குவித்துள்ளார். அஜிங்க்யா ரஹானே, நம்பிக்கை அளிக்கும் விதமாக சில ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்த போட்டியில் இதுவரை அவர் 449 ரன்களைக் குவித்துள்ளார்.
பாக்னர்: பந்து வீச்சைப் பொறுத்த வரை ஜேம்ஸ் பாக்னர் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை அவர் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவருக்குப் பக்க பலமாக மேற்கிந்தியத் தீவுகளின் கேவன் கூப்பர் (17 விக்கெட்டுகள்) திகழ்வார்.
பந்து வீச்சே பலம்: ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை பந்து வீச்சே பலமாகக் கருதப்படுகிறது. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள டேல் ஸ்டெயின் அந்த அணியில் இடம் பெற்றுள்ளதே அதற்குக் காரணமாகும். அவரது பந்து வீச்சை ராயல்ஸ் அணி வீரர்கள் எதிர்கொள்வது கடினம். ஐபிஎல் போட்டியில் இதுவரை அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் கூட சிறப்பாகப் பந்து வீசி எதிரணியின் ரன் குவிப்பைத் தடுப்பதில் ஸ்டெயின் வல்லவர்.
ஸ்டெயினுக்குப் பக்க பலமாக இஷாந்த சர்மா இருந்து வருகிறார். இந்தக் கூட்டணி எதிரணியின் தொடக்க வீரர்களை விரைவாக வீழ்த்தி விட்டால், பின்னர் அந்த அணி மீள்வது கடினம். இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா (20 விக்கெட்), ஆல்-ரவுண்டர் திசாரே பெரைரா (19 விக்கெட், 222 ரன்கள்) ஆகியோர் பந்து வீச்சுத்துறைக்கு வலு சேர்க்கின்றனர்.
பேட்டிங்கைப் பொறுத்த வரை ஹைதராபாத் அணி மிகவும் பலவீனமாகவே உள்ளது. அந்த அணியின் வீரர்களில் ஒருவர் கூட இப்போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கவில்லை. தொடக்க வீரர் ஷிகர் தவாண் அணிக்குத் திரும்பியபின், பேட்டிங் ஓரளவு பலமடைந்துள்ளது. 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 3 அரை சதங்களை எடுத்துள்ளார். அவர், ஹைதராபாத் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். அவர், விரைவாக ஆட்டமிழந்து விட்டால், அணியின் ரன் குவிப்பு குறைந்துவிடும். பெரைரா, டேரன் சமி கூட்டணி ஓரளவு சிறப்பாக இருந்தாலும், பெரிய அளவில் ரன்கள் குவிக்காதது ஏமாற்றமே. கடைசியாக நடைபெற்ற சில ஆட்டங்களில் சமந்த்ரே ரன் குவித்துள்ளார்.
கேப்டன் யார்: அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. ஸ்டெயின், சமி, பெரைரா ஆகியோர் அணியில் இடம் பிடிப்பது உறுதி. மற்றொரு வெளிநாட்டு வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது, இலங்கையின் சங்ககாராவா அல்லது ஆஸ்திரேலியாவின் கேமரூன் ஒயிட்டா என்பது போட்டியன்று தெரிய வரும்.
இந்த சீசனில் இவர்களிருவரும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனினும், ஆடும் லெவன் அணியில் இவர்களில் யாரேனும் ஒருவர் இடம் பெற்றால் அவரே கேப்டன் பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.