முகப்பு
தலையங்கம்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!

சற்று தாமதமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தொடங்கி விட்டது என்றாலும், கோடையின் வெப்பம் தணிந்த பாடில்லை.

Updated On : 17 ஜூன் 2026, 6:00 am IST
தென்மேற்குப் பருவமழை - DPS
பகிர்:

சற்று தாமதமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தொடங்கி விட்டது என்றாலும், கோடையின் வெப்பம் தணிந்த பாடில்லை. இது வரையில் இதுபோலக் கோடை வெப்பம் நீண்டு நின்றதில்லை என்றால், இந்தப் போக்கு அதிகரிக்குமே தவிரக் குறையாது என்று எச்சரிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

பொதுவாகப் பகல் பொழுதில் காணப்படும் வெப்பம் இரவில் குறைந்து தட்பவெப்பம் குளிர்வதுதான் வழக்கம். அண்மைக் காலமாக, இரவுநேரத் தட்பவெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்படுவது, பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக மாறி இருக்கிறது. இரவு நேரத்தில் அதிகரித்த வெப்பம் காரணமாக, தூக்கத்துக்கான நேரம் குறைகிறது.

18 முதல் 22 டிகிரி செல்சியஸ் என்பதுதான் நிம்மதியான உறக்கத்துக்கும், தூக்க நேர உடல் செயல்பாட்டுக்கும் உத்தமமானது. அது அதிக அளவில் அதிகரிக்கும்போது, அட்ரினலின், கார்டிஸோல் போன்ற சுரப்பிகளை ஊக்குவித்து எரிச்சல், பதற்றம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதனால், தேவையில்லாத வாக்குவாதம், தெருவில் ஏற்படும் சச்சரவுகள் போன்றவை தூண்டப்படுவதுடன், உற்பத்தித் திறனும் 30% முதல் 60% வரை குறைகிறது என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

Advertisement

Advertisement

"அதிகரித்த வெப்பமும் மேலாண்மையும்' என்கிற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ஐ.நா.வின் "எஃப். ஏ.ஓ.' எனப்படும் உணவு மற்றும் விவசாய நிறுவனம். உலகில் வேளாண்மை சார்ந்த பணிகளில் ஈடுபடும் சுமார் 123 கோடி பேரின் வாழ்வாதாரத்தை வெப்ப அலை பாதிக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ""பயிர்கள், கால்நடைகள்,கோழி உள்ளிட்ட பறவையினங்கள், நீர்வாழ் உயிரினங்கள் என்று எல்லாமே, மனிதர்களைவிட அதிகமான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. காடுகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதில் விவசாயத் தொழிலாளர்கள்தான் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்'' என்கிறது அந்த அறிக்கை.

தெற்கு ஆசியா, சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பகுதிகளில் அதிகரித்த வெப்பம் காரணமாக ஆண்டில் 250 நாள்கள் வெளியில் பணியாற்ற உகந்ததாக இல்லை என்கிறார்கள் உலக சுகாதார நிறுவனத்தார். குறைந்த வேலை நேரத்தால், குறையும் உற்பத்தி ஏற்றத்தாழ்வுக்கு வழிகோலும். அது மட்டுமல்லாமல், ஏனைய பணிகளில் ஈடுபடுபவருடன் ஒப்பிடும்போது, விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் 35 மடங்கு அதிகமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

2023-24 பயிராண்டில் நீண்டு நின்ற வெப்ப அலை காரணமாக பிரேசிலில் சராசரியைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது. அதன் காரணமாக சோயாபீன்ஸ் உற்பத்தி 10% குறைந்தது மட்டுமல்லாமல், பரவலாகக் காட்டுத் தீயும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. மொராக்கோவில் தொடர்ந்து காணப்பட்ட வெப்ப அலையும் வெள்ளப் பெருக்கும் 43% தானிய உற்பத்திக் குறைவுக்குக் காரணமாயின. தெற்கு சிலியில் கடல் வெப்பம் அதிகரித்ததால் 40,000 டன் சாலமன் மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

2022-இல் வெப்ப அலை காரணமாக வழக்கத்தைவிட வெப்பம் 10.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. போதாக்குறைக்கு, பருவ மழைப் பொழிவும் பல பாகங்களில் பொய்த்தது.

அதன் விளைவாக கோதுமை உற்பத்தி 34% , காய்கறி உற்பத்தி 15% பாதிக்கப்பட்டது என்பது ஆய்வில் தெரிய வருகிறது.

வெப்ப அழுத்தம் (ஹீட் ஸ்ட்ரெஸ்) என்பது இந்தியா முழுவதுக்குமான பாதிப்பாக மாறி இருக்கிறது. அதிகரித்து விட்டிருக்கும் வெப்பம் காரணமாக ஏறத்தாழ 4.4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 3.41 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரச் செயல்பாடுகளின் இழப்பும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் காற்று ஈரப்பதம், வெப்பமான இரவுகள், நகர்மயமாதல் அதிகரிப்பு, மண் காய்ந்து போதல் உள்ளிட்டவை வெப்ப பாதிப்பை மேலும் கடுமையாக்குகின்றன.

2026 கோடைக்காலம் இதுவரையில் இல்லாத அளவில் பரவலாக வெப்ப அலையை எதிர்கொள்கிறது. உலகளாவிய அளவில் அதிக வெப்பத்தை எதிர்கொண்ட முதல் 50 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. 19 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள நூறுக்கும் அதிகமான நகரங்கள் சாதாரணத்தில் இருந்து கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டன.

மார்ச் மாதம் முதல் இதுவரையில், ஏறத்தாழ 27,000 பேர் வெப்பத் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மே மாதத்தில் மட்டும் 19,000 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்றால் 56 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவை குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிக்கை. 2024-இல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 1,800 வெப்ப அலை மரணங்களைப் பதிவு செய்ததைக் குறிப்பிடத் தோன்றுகிறது.

கோடைக்கால வெப்ப அலை என்பதும், அதைத் தொடர்ந்து பருவமழைக் காலத்தில் ஆங்காங்கே மேக வெடிப்பால் ஏற்படும் அடைமழைப் பொழிவும் வழக்கமாகி விட்டன. மழைக் காலத்தில் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் மழை வெள்ளத்தில் மிதப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இயற்கையை அதிகமாகவே சீண்டிக் கொண்டிருக்கும் மனித இனம், அதன் சீற்றத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், புராண காலப் "பிரளயம்' என்பது நிகழ்கால நிஜமாகி விடும்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

திருக்குறள் (எண் 475) அதிகாரம்: வலி அறிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.