தனிக்கவனம் பெற்ற மதுரை! இயல்பிலிருந்து மாறுவதால் மக்கள் அதிர்ச்சி
தனிக்கவனம் பெற்ற மதுரையில், கடும் வெய்யில் பதிவாகியிருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, நாட்டிலேயே மிகவும் வெப்பமான நகரமாக மதுரை நகரம் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இயல்பான அளவை விட 5.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மதுரையில் வெப்பம் வாட்டி வருகிறது.
மதுரை விமான நிலையம் பகுதியில் நேற்று 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. நேற்றைய நிலவரப்படி, மதுரைதான் நாட்டிலேயே மிக அதிகமான வெப்பமான நகரம் என்று தனிக்கவனம் பெற்றுள்ளது.
வழக்கமாக மதுரை எப்போதும் கொளுத்தும் வெய்யிலுடன் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் வெக்கையாகக் காணப்படுவது இயல்புதான் என்றபோதிலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் வெய்யில் கொளுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
மதுரையில் மற்ற இடங்களில் நேற்று 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், இது இயல்பை விட 5.7 டிகிரி செல்சியஸ் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை வலுப்பெறாத நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து மக்களுக்கு மிகப்பெரிய துயரமாக மாறியிருக்கிறது. ஆனால், வெள்ளிக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் இந்த நிலை சற்று மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, பலமான காற்று வீசி வருகிறது. இது தமிழகம் முழுவதும் பரவலாக மழையைக் கொடுக்கும். ஒரு வார காலத்துக்கு இந்த நிலை நீடிக்கும். மீண்டும் பருவமழை பலவீனமடையும் என்று தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூரில் நேற்று 40.4 டிகிரி செல்சியஸ், திருத்தணி 40.5 டிகிரி செல்சியஸ், திருச்சி விமான நிலையம் 40.1 டிகிரி செல்சியஸ், பாளையம்கோட்டை 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
சென்னையிலும் வழக்கமான வெப்ப அளவை விட அதிகமாகவே பதிவாகி வருகிறது. மீனம்பாக்கத்தில் நேற்று 39 டிகிரி செல்சியஸ் மற்றும் இதர பகுதிகளில் இதே அளவை ஒட்டி வெப்பம் பதிவாகியிருந்தது.
Madurai in the spotlight! People shocked by the departure from the norm.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.