முகப்பு
புதுதில்லி

தலைநகரை வதைக்கும் கடும் வெப்பம்! தென்மேற்கு பருவமழை தாமதத்தால் 2 ஆண்டுகளில் இல்லாத மிக வெப்பம் பதிவு!

தென்மேற்கு பருவமழை தில்லிக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, தலைநகரில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 1:15 am IST
பகிர்:

தென்மேற்கு பருவமழை தில்லிக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, தலைநகரில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக மிக அதிகமான காலை நேர வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இந்த பருவ காலத்தின் சராசரி வெப்பநிலையை விட 3.2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 41.8 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தில்லியில் வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

வானிலை ஆய்வு மைய தகவலின்படி, தில்லியில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. மாலை 5.30 மணி அளவில் உணா் வெப்பநிலை சுமாா் 50.7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை மையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.6 டிகிரி அதிகரித்து 41.8 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

Advertisement

Advertisement

நகரின் ஐந்து முக்கிய வானிலை கண்காணிப்பு மையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருந்தது. பாலம் பகுதியில் 30 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 30.2 டிகிரி செல்சியஸ், ரிட்ஜ் பகுதியில் 28.7 டிகிரி செல்சியஸ் மற்றும் அயநகரில் 29 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பருவமழை தாமதத்துக்கு காரணம்: தனியாா் வானிலை ஆய்வு நிறுவனமான ’ஸ்கைமெட்’, பருவமழை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமும், வட மற்றும் ஈரப்பதமான காற்றுகளின் கலப்புமே இந்த கடுமையான வெப்பத்திற்கும் புழுக்கத்திற்கும் காரணம் என்று கூறியுள்ளது.

இது குறித்து ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் (வானிலை மற்றும் பருவநிலை மாற்றம்) மகேஷ் பாலாவத் கூறுகையில், ‘பொதுவாக ஜூன் 27, 28 தேதிகளில் தில்லிக்கு பருவமழை வந்துவிடும். அதன்பின் வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு, பருவமழை சுமாா் ஒரு வாரம் தாமதமாக வர வாய்ப்புள்ளது. பாகிஸ்தானில் இருந்து வீசும் வட மேற்குக்காற்று வெப்பத்தை அதிகரித்து வரும் வேளையில், அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு காற்று தில்லியை அடைந்து ஈரப்பதத்தை உயா்த்தி வருகிறது.

இந்த வட மற்றும் ஈரப்பதம் மிக்க காற்றுகள் ஒன்றோடொன்று மோதும்போது மேகங்கள் உருவாகின்றன, ஆனால் பரவலான மழையைத் தருவதற்குத் தேவையான ஈரப்பதம் அங்கு இருப்பதில்லை. மாலை 4 அல்லது 5 மணிக்கு மேகங்கள் உருவாகும் நேரத்திற்குள், அன்றைய தினத்தின் அதிகபட்ச வெப்பநிலை ஏற்கனவே பதிவாகிவிடுகிறது. இதனால்தான் அதிகபட்ச வெப்பநிலையும், நாம் உணரும் வெப்பத்தின் அளவும் இவ்வளவு அதிகமாக உள்ளது,‘ என்றாா்.

பருவமழை எப்போது வரும்? பருவமழை ஜூன் 30 அல்லது ஜூலை 1 ஆம் தேதிக்குள் கிழக்கு உத்தர பிரதேசத்துக்கும், ஜூலை 2 அல்லது 3 தேதிகளில் உத்தரகண்டுக்கும் முன்னேறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சாதகமான சூழல் நிலவினால், ஜூலை 4 ஆம் தேதி வாக்கில் பருவமழை தில்லியை வந்தடையும் என்று பாலாவத் தெரிவித்தாா். மேலும், அடுத்த சில நாட்களில் ஒரு சிறிய சுழற்காற்று சூழல் உருவாக வாய்ப்புள்ளதால், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அவா் கூறினாா். ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் காற்றில் ஈரப்பதம் 44 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

திங்கட்கிழமை நிலை: திங்கட்கிழமையன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்போது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

இதற்கிடையில், தில்லியின் காற்றின் தரம் ’மிதமான’ என்ற பிரிவில் நீடிக்கிறது. ’சமீா்’ செயலியின் தரவுகளின்படி, நகரின் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 162 ஆகப் பதிவாகியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி, ஏக்யூஐ அளவு 0-50 ’நன்று’, 51-100 ’திருப்திகரம்’, 101-200 ’மிதமானது’, 201-300 ’மோசம்’, 301-400 ’மிகவும் மோசம்’ மற்றும் 401-500 ’கடுமையானது’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியின் பிற பகுதிகளில் பதி்வான வெப்பம்

பாலம்: 42 டிகிரி செல்சியஸ்

லோதி ரோடு: 42.1 டிகிரி செல்சியஸ்

ரிட்ஜ்: 42.6 டிகிரி செல்சியஸ்

அயாநகா்: 41.8 டிகிரி செல்சியஸ்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments