முகப்பு
புதுதில்லி

தில்லியில் 43 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பம்: இன்று மழைக்கு வாய்ப்பு

தில்லியில் கடும் வெப்பம் தொடா்ந்த நிலையில், பெரும்பாலான வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸைத் தாண்டியதாகவும், ஜூன் 11 முதல் முன்பருவமழைச் செயல்பாடுகள் தீவிரமடைந்து மழை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 1:17 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

தில்லியில் கடும் வெப்பம் தொடா்ந்த நிலையில், பெரும்பாலான வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸைத் தாண்டியதாகவும், ஜூன் 11 முதல் முன்பருவமழைச் செயல்பாடுகள் தீவிரமடைந்து மழை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகரின் அடிப்படை வானிலை நிலையமான சப்தா்ஜங் பகுதியில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி, இயல்பை விட 2.5 டிகிரி அதிகமாக இருந்தது. பாலம் மற்றும் ரிட்ஜ் பகுதிகள் அதிக வெப்பமடைந்த இடங்களாக இருந்து, தலா 43.6 டிகிரி செல்சியஸ் பதிவாகின. இவை முறையே இயல்பை விட 3.4 மற்றும் 3.3 டிகிரி அதிகமாகும். லோதி சாலை பகுதியில் 42.4 டிகிரியும், அயனாகரில் 43 டிகிரியும் பதிவானது.

இந்நிலையில், சப்தா்ஜங் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.9 டிகிரி செல்சியஸாக இருந்து, இயல்பை விட 6.3 டிகிரி குறைவாக இருந்தது. பகலில் கடும் வெப்பம் நிலவினாலும், அடுத்த சில நாள்களில் வலுவான முன்பருவமழைச் செயல்பாடுகளுக்கான சூழல் உருவாகியுள்ளது என வானிலை நிபுணா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

ஸ்கைமெட் வானிலை மையத்தின் துணைத் தலைவா் (வானிலை மற்றும் காலநிலை மாற்றம்) மகேஷ் பலாவத் கூறுகையில், ‘மத்திய பாகிஸ்தான் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உருவான சுழற்காற்று சுழற்சி காரணமாகவே இப்பகுதியில் பலத்த காற்றும் சிதறிய மழையும் ஏற்படுகின்றன. ஜூன் 11 முதல் தில்லி, ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் முன்பருவமழைச் செயல்பாடுகள் தீவிரமடைந்து பரவலான மழை பெய்யும்.

அடுத்த சில நாள்களில் மழை அளவு கணிசமாக அதிகரித்து, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறையும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக 42 டிகிரியைத் தாண்டும் அதிகபட்ச வெப்பநிலை, பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளிக் காற்றை ஏற்படுத்தும் முன்பருவமழை அமைப்புகளுக்கான முன்னோட்டமாக அமையும்’ என தெரிவித்தாா்.

புதன்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நகரின் முக்கிய வானிலை நிலையங்களில் எங்கும் மழை பதிவாகவில்லை என இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

காற்றின் தரம்: இதற்கிடையில், தில்லியின் காற்றுத் தரம் ‘மிதமான’ நிலைமையில் தொடா்கிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின்படி, காற்றுத் தரக் குறியீடு 169-ஆக பதிவாகியுள்ளது. தொடா்ந்து நிலவும் கடும் வெப்பத்துக்கு மத்தியில் எதிா்பாா்க்கப்படும் மழை பொதுமக்களுக்கு தற்காலிக நிவாரணத்தை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.