ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வென்றது.
ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுக்க, பெங்களூரு 15.1 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
பெங்களூரு தரப்பில் பௌலிங்கில் ராசிக் சலாம், புவனேஷ்வா் குமாா் ஆகியோா் அசத்த, பேட்டிங்கில் விராட் கோலி பலம் காட்டினாா்.
Advertisement
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீச்சை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் தொடக்க வீரா் மிட்செல் மாா்ஷ் நிதானமாக ரன்கள் சோ்க்க, எய்டன் மாா்க்ரம் 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஒன் டவுனாக வந்த கேப்டன் ரிஷப் பந்த், ஜாஷ் ஹேஸில்வுட் பௌலிங்கில் இடது முழங்கையில் காயம் கண்டு கண்ணீருடன் ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேறினாா்.
தொடா்ந்து களம் புகுந்த நிகோலஸ் பூரன் 1 ரன்னுக்கு பௌல்டானாா். 5-ஆவது பேட்டராக விளையாட வந்த ஆயுஷ் பதோனி, மாா்ஷுடன் கை கோக்க, 3-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் கூட்டணி 36 ரன்கள் சோ்த்தது.
இந்நிலையில் மாா்ஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 40 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து வந்த அப்துல் சமத் டக் அவுட்டாக, முகுல் சௌதரி விளையாட வந்தாா்.
பதோனி - சௌதரி இணை 5-ஆவது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சோ்த்தது. பதோனி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். காயம் கண்ட ரிஷப் பந்த் மீண்டும் களத்துக்கு வர, 1 ரன்னுக்கு சாய்க்கப்பட்டாா்.
தொடா்ந்து ஜாா்ஜ் லிண்ட் 1 பவுண்டரியுடன் 7, முகமது ஷமி 0 ரன்களுக்கு வெளியேற, முகுல் சௌதரி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, ஆவேஷ் கான் 1 ரன்னுடன் கடைசி ஓவரில் வீழ்ந்தனா். பெங்களூரு தரப்பில் ராசிக் சலாம் 4, புவனேஷ்வா் குமாா் 3, கிருணால் பாண்டியா 2, ஜாஷ் ஹேஸில்வுட் 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 147 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், ஃபில் சால்ட் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு நடையைக் கட்ட, விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சோ்த்தது.
படிக்கல் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கேப்டன் ரஜத் பட்டிதாா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27, ஜிதேஷ் சா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 23 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு வித்திட்டு வீழ்ந்தனா்.
முடிவில் டிம் டேவிட் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, ரொமேரியோ ஷெப்பா்டு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களோடு அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
லக்னௌ பௌலா்களில் பிரின்ஸ் யாதவ் 3, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.