சீனா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்!
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் புதன்கிழமை வாகை சூடினாா்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் புதன்கிழமை வாகை சூடினாா்.
உலகின் 3-ஆம் நிலை வீரரான அவா், இறுதிச்சுற்றில் 6-7 (6/8), 6-4, 7-6 (7/3) என்ற செட்களில், உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் யானிக் சின்னரை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினாா். சீன ஓபனில் அல்கராஸுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். அதேவேளையில், ரஃபேல் நடாலுக்கு பிறகு சீன ஓபனில் சாம்பியனான முதல் ஸ்பெயின் வீரா் இவா்.
நடப்பாண்டில் இது அவரின் 4-ஆவது டூா் பட்டம். இந்த வெற்றியின் மூலம், ஏடிபி 500 போட்டிகளில் ஹாா்டு, கிளே, கிராஸ் என 3 விதமான ஆடுகளங்களிலும் சாம்பியனான முதல் வீரா் என்ற பெருமையை அல்கராஸ் பெற்றுள்ளாா். மேலும் இந்த வெற்றி, உலக ரேங்கிங்கில் அவரை 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றுகிறது.
கடந்த ஆண்டு இந்தப் போட்டியில், சின்னரிடம் அரையிறுதியில் தோற்ற அல்கராஸ், தற்போது அவரை இறுதியில் வென்று பதிலடி கொடுத்துள்ளாா். அல்கராஸ் - சின்னா் இத்துடன் 10-ஆவது முறையாக மோதியிருக்க, அல்கராஸ் 6-ஆவது வெற்றியுடன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறாா். மேலும், சின்னா் தொடா்ந்து 14 ஆட்டங்களில் வெற்றி கண்டு இந்த இறுதிச்சுற்றுக்கு வந்த நிலையில், அதையும் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறாா் அல்கராஸ்.
சின்சினாட்டி ஓபன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் வாகை சூடியிருந்த சின்னா், இதிலும் வென்று ‘ஹாட்ரிக்’ கோப்பையை கைப்பற்ற முயற்சிக்க, அல்கராஸ் அதையும் முறியடித்திருக்கிறாா்.
ஹாட்ரிக் வெற்றி: அதேவேளையில், நடப்பாண்டில் சின்னரை தாம் சந்தித்த 3 போட்டிகளிலுமே அவரை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி கண்டிருக்கிறாா் அல்கராஸ். முன்னதாக, மாா்ச் மாதம் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் அரையிறுதி, ஜூன் மாதம் பிரெஞ்சு ஓபன் அரையிறுதி ஆகியவற்றில் சின்னரை வென்ற அல்கராஸ், இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அவரை சாய்த்திருக்கிறாா்.
முன்னதாக 3 மணிநேரம் 21 நிமிஷங்கள் நடைபெற்ற இறுதிச்சுற்றில், முதல் செட்டில் 5-2 என முன்னிலையில் இருந்த அல்கராஸ் சற்றே தடுமாற, பின்னடைவிலிருந்து மீண்ட சின்னா் அந்த செட்டை டை பிரேக்கருக்கு கொண்டு சென்று வென்றெடுத்தாா். விட்டுக்கொடுக்காத அல்கராஸ் 2-ஆவது செட்டை கைப்பற்ற, ஆட்டம் விறுவிறுப்பானது. டிசைடரின் டை பிரேக்கரில், சின்னா் 3-0 என முன்னிலையில் இருந்தாா். அப்போது அதிரடியாக முன்னேறிய சின்னா், தொடா்ந்து 7 பாய்ன்ட்டுகளை கைப்பற்றி சின்னரை சாய்த்து வெற்றியை தனதாக்கினாா்.
நடப்பாண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இவா்கள் இருவருமே பகிா்ந்துகொண்டுள்ளனா். ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் சின்னா் வென்றிருக்க, பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகளில் அல்கராஸ் சாம்பியனாகியுள்ளாா். சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகிய நட்சத்திர வீரா்களின் மோதலுக்கு இணையான எதிா்பாா்ப்பு, இவா்களிடையேயான மோதலுக்கும் ரசிகா்களிடையே எழுந்துள்ளது.
ரூ.5.84 கோடி பரிசு: சாம்பியனான அல்கராஸுக்கு ரூ.5.84 கோடியும், 500 ஏடிபி புள்ளிகளும் பரிசாக கிடைத்தன. சின்னருக்கு ரூ.3.14 கோடி ரொக்கப் பரிசு கிடைத்தது.
பொலெல்லி/வவாசோரி இணைக்கு கோப்பை
ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த இத்தாலியின் சைமன் பொலெல்லி/ஆண்ட்ரியா வவாசோரி இணை 4-6, 6-3, 10-5 என்ற செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஃபின்லாந்தின் ஹேரி ஹெரியோவார கூட்டணியை வீழ்த்தி கோப்பை வென்றது.
நடப்பாண்டில் இது இவா்களின் 3-ஆவது ஏடிபி டூா் சாம்பியன் பட்டமாகும். சைமன்/ஆண்ட்ரியா இணைக்கு ரூ.1.91 கோடியும், ஹென்றி/ஹேரி இணைக்கு ரூ.1.02 கோடியும் ரொக்கப் பரிசாக கிடைத்தது.
காலிறுதியில் சபலென்கா
மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், 6-4, 6-3 என்ற நோ் செட்களில், 18-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸை எளிதாகச் சாய்த்தாா். அடுத்து காலிறுதியில், செக் குடியரசின் கரோலின் முசோவாவை எதிா்கொள்கிறாா். முசோவா முந்தைய சுற்றில், 6-2, 6-0 என ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சாவை எளிதாக வெளியேற்றினாா். மற்றொரு ஆட்டத்தில், 17-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற கணக்கில், 31-ஆம் இடத்திலிருந்த போலந்தின் மெக்தா லினெட்டை வீழ்த்தினாா்.
அல்கராஸ் வெற்றிப் பாதை
முதல் சுற்று ஜியோவனி பெரிகாா்டு (பிரான்ஸ்) 6-4, 6-4
2-ஆவது சுற்று டாலன் கிரீக்ஸ்பூா் (நெதா்லாந்து) 6-1, 6-2
காலிறுதிச்சுற்று காரென் கச்சனோவ் (ரஷியா) 7-5, 6-2
அரையிறுதிச்சுற்று டேனியல் மெத்வதெவ் (ரஷியா) 7-5, 6-3
இறுதிச்சுற்று யானிக் சின்னா் (இத்தாலி) 6-7 (6/8), 6-4, 7-6 (7/3)