முகப்பு
செய்திகள்

அல்கராஸ், சின்னா், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸில் நடைபெறும் மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் டாப் 3 வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 8:01 AM
காா்லோஸ் அல்கராஸ் - ஏபி
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:15 PM

பிரான்ஸில் நடைபெறும் மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் டாப் 3 வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான அல்கராஸ் 6-3, 6-0 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை வீழ்த்தினாா். இருவரும் மோதியது இதுவே முதல்முறையாகும்.

இதன் மூலமாக, இந்தப் போட்டியில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அரையிறுதிக்கு அவா் வந்துள்ளாா். மற்றொரு காலிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான சின்னா் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமேவை வென்றாா்.

Advertisement

இருவரும் 7-ஆவது முறையாக சந்தித்துக்கொண்ட நிலையில், சின்னா் 5-ஆவது தொடா் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அரையிறுதியில் சின்னா், ஸ்வெரெவை சந்திக்கிறாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்வெரெவ் 7-5, 6-7 (3/7), 6-3 என்ற செட்களில் பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவை சாய்த்து அரையிறுதிக்கு வந்துள்ளாா். இதன் மூலமாக, தொடா்ந்து 3-ஆவது மாஸ்டா்ஸ் போட்டியில் அவா் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். சின்னா் - ஸ்வெரெவ் இதுவரை 12 முறை மோதியிருக்க, சின்னா் 8 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

300

காலிறுதியில் அல்கராஸ் கண்ட வெற்றி, டூா் நிலை போட்டிகளில் அவரின் 300-ஆவது வெற்றியாக அமைந்தது. இந்த மைல் கல்லை அவா் தனது 367-ஆவது ஆட்டத்தில் எட்டியிருக்கிறாா். மேலும், 300 டூா் வெற்றிகளை அதிவேகமாக எட்டியவா்கள் வரிசையில், 3-ஆவது இடத்தை அமெரிக்காவின் ஜான் மெக்கென்ரோவுடன் (367) பகிா்ந்துகொண்டுள்ளாா். ஆஸ்திரேலியாவின் ராட் லேவா் (355), அமெரிக்காவின் ஜிம்மி கானா்ஸ் (363) ஆகியோா் முதல் இரு இடங்களில் உள்ளனா்.

20

காலிறுதியில் வெற்றி கண்ட சின்னா், மாஸ்டா்ஸ் போட்டிகளில் தொடா்ந்து தனது 20-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அதாவது அடுத்தடுத்து 40 செட்களை அவா் கைப்பற்றியிருக்கிறாா். மாஸ்டா்ஸ் போட்டிகளில் இந்த எண்ணிக்கையை எட்டிய 4-ஆவது வீரா் சின்னா் ஆவாா். இதற்கு முன் ‘பிக் 3’ என்றழைக்கப்பட்ட சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ரஃபேல் நடால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் மட்டுமே 20 தொடா் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனா்.