ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
மிர்பூரில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 101, மோமினுல் ஹக் 91 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் 386 ரன்களுக்கே முடித்துக் கொண்டது. அஸான் அவைஸ் 103, அப்துல்லா ஃபஸல் 60 ரன்கள் சேர்க்க, வங்கதேச பெளலர்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Advertisement
Advertisement
அடுத்து, முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 4-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்திருந்தது.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, நஜ்முல் ஹுசைன், முஷ்ஃபிகர் ரஹிம் ஆகியோர் வங்கதேச இன்னிங்ஸை தொடர்ந்தனர். இதில் ரஹிம் 4 பவுண்டரிகளுடன் 22, லிட்டன் தாஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நஜ்முல் ஹுசைன் 7 பவுண்டரிகளுடன் 87 ரன்களுக்கு விடைபெற்றார்.
மெஹிதி ஹசன் மிராஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24, தைஜுல் இஸ்லாம் 3, தஸ்கின் அகமது 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்து "டிக்ளேர்' செய்தது. எபாதத் ஹுசைன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஹசன் அலி, நோமன் அலி ஆகியோர் தலா 3, ஷாஹீன் அஃப்ரிதி 2, முகமது அப்பாஸ் 1 விக்கெட் எடுத்தனர்.
268 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டிருந்த பாகிஸ்தான், மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
அப்துல்லா ஃபஸல் 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். சல்மான் அகா 1 பவுண்டரியுடன் 26, அஸான் அவைஸ் 15, செளத் ஷகீல் 15, முகமது ரிஸ்வான் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இமாம் உல் ஹக் 2, கேப்டன் ஷான் மசூத் 2, நோமன் அலி 4, ஹசன் அலி 1, ஷாஹீன் அஃப்ரிதி 0 ரன்களுக்கு விடைபெற, பாகிஸ்தான் இன்னிங்ஸ் 163 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. முகமது அப்பாஸ் 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றார்.
வங்கதேச பெளலர்களில் நஹித் ராணா 5, தஸ்கின் அகமது, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2, மெஹிதி ஹசன் மிராஸ் 1 விக்கெட் சாய்த்தனர். இரு இன்னிங்ஸ்களிலுமாக 188 ரன்கள் (101, 87) சேர்த்த வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.