முகப்பு
தமிழ்மணி

இந்த வார கலாரசிகன்

பிரதமருடன் ஜப்பானுக்குப் பயணித்தது பெரிதல்ல. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கியபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்ததே, அதுதான் பெரிது.

Updated On : 2 ஜூன், 2013 at 3:00 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

பிரதமருடன் ஜப்பானுக்குப் பயணித்தது பெரிதல்ல. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கியபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்ததே, அதுதான் பெரிது.

தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.

கரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கரகோஷம். நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன்.

Advertisement

முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர். சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர்.

"தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்திய சரித்திரம், இந்திய சரித்திரத்தில் அரசுமுறை முதலிய பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர்.

நொபுரூ கராஷிமாவை சந்திக்க முடிந்ததே தவிர, அவருடன் அளவளாவ முடியவில்லை. டோக்கியோ நகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே சென்று வர நேரம் அனுமதிக்கவில்லை.

தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய்

"பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார். நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா? தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?

---------------------------------------------------

தாய்லாந்திலிருந்து விமானத்தில் தில்லி திரும்பும்போது, "மலையாள மனோரமா' நாளிதழின் தலைமை நிருபர் விஜயமோகன் நாயர் ஓர் ஆச்சரியமான செய்தி சொன்னார். ""டி.எம். செüந்தரராஜனுக்கு 2003-ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருது எப்படிக் கிடைத்தது என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்கிற கேள்விக்கு என்னால் உதட்டைப் பிதுக்கத்தான் முடிந்தது. அந்தச் சம்பவத்தை அவர் விளக்கினார்.

உள்துறை அமைச்சகத்திலிருந்து, "பத்மஸ்ரீ' விருதுகளுக்கான பட்டியல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியை நேரில் வந்து சந்திக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவரும் சென்றார்.

அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த மேதகு. டாக்டர் அப்துல் கலாம் அந்த அதிகாரியிடம் கேட்டார்- ""இரண்டு பெயர்களைச் சேர்க்க விரும்புகிறேன். சேர்க்கலாமா?''

""இந்தப் பட்டியலில் எந்தப் பெயரைச் சேர்க்கவோ, விலக்கவோ தங்களுக்கு முழு உரிமையும் உண்டு. தாராளமாக அந்தப் பெயர்களைச் சொல்லுங்கள்; சேர்த்து விடுகிறோம்'' என்றார் அதிகாரி.

அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சேர்க்கச் சொன்ன இரண்டு பெயர்கள்- டி.எம். செüந்தரராஜன், டி.எஸ். ஷான்பாக்.

""இத்தனை நாள்களாக டி.எம். செüந்தரராஜனுக்கு "பத்மஸ்ரீ' விருது தரப்படவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒலித்த, ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அவருடையது. நான் விண்வெளி விஞ்ஞானியாக இருந்தபோது, எங்களுக்கெல்லாம் தனது "ஸ்ராண்ட்' என்கிற புத்தக விநியோக நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து பல விண்வெளி ஆராய்ச்சி பற்றிய புத்தகங்களை வரவழைத்துத் தந்தவர் டி.என். ஷான்பாக். அவரது உதவியால்தான் "பொக்ரான்' அணு சோதனையிலிருந்து பல விண்கலங்களை நாங்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டி சாதனைகளைச் செய்ய முடிந்தது. இவர்கள் இருவருக்கும்நான் "பத்மஸ்ரீ' விருது வழங்க விழைகிறேன்!'' - கலாம் சொன்னாராம்.

அப்துல் கலாம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாகேஷ் போல டி.எம். சௌந்தரராஜனுக்கும் பத்மஸ்ரீ கிடைக்காமலே போயிருக்கும்!

---------------------------------------------------

க.நா. சுப்பிரமணியம் எனது நண்பர் பாவை சந்திரனுக்கு மிகவும் பிடித்தமானவர். க.நா.சு. என்கிற படைப்பிலக்கியவாதியை எனக்குப் பிடித்த அளவுக்கு விமர்சகரைப் பிடிக்காது. "குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கும் திறனாய்வு அவருடையது என்பது எனது கருத்து. மேலும், நல்ல விமர்சகனுக்குத் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் இருக்கக்கூடாது. க.நா.சு.வுக்கு அது உண்டு.

நான் தில்லியில் இருந்த நேரம். தனக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பதற்கு, க.நா.சு. கையாண்ட வழிகளும், மேற்கொண்ட பிரயத்னங்களும் அப்போது சாகித்ய அகாதெமியில் சந்தி சிரித்தது.

"சாகித்ய அகாதெமி' விருதுக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவர் அவர் என்பதில் எனக்கு

மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இலக்கியத் திறனாய்வுக்காக அல்ல; படைப்பிலக்கியத்துக்காக விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

பாவை சந்திரன் "குங்குமம்' வார இதழின் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த "இலக்கியச் சாதனையாளர்கள்' தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. தான் சந்தித்த, தொடர்பு கொண்ட 21 இலக்கியவாதிகளுடனான அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார் க.நா.சு.

""எந்த நபரைப் பற்றியுமே உண்மை என்பதை நாலு பேர் சொல்லத் தெரிந்தவர் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது - லாபகரமானது. ஒருவர் சொன்னதுபோல, இன்னொருவர் சொல்வது அமையாது. ஆனால், பலர் தமிழ்நாட்டில் யாரைப் பற்றியும் தங்கள் அந்தரங்கத்தில் நினைப்பதைச் சொல்லத் தயாராக இருப்பதில்லை என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அல்லாமல், ஐம்பது, அறுபது, எழுபதுகளில் வாழ்ந்த தமிழ் இலக்கியச் சாதனையாளர்கள் அனைவர் பற்றியும் தம் கருத்துகளைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்திருக்கிறார் க.நா.சு.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. சுவாரஸ்யமான பல சம்பவங்கள்; புதிய தகவல்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்த அதே சுவாரஸ்யம் இப்போதும்!

---------------------------------------------------

"தமிழ் கூடல்' இணையதளத்தில் "ஹிஷாலீ' என்பவர் பதிவு செய்திருக்கும் ஹைக்கூ கவிதை "ஐந்தாண்டுத் திட்டம்'.

அசையும் நாற்காலியில் அசையாச் சொத்துக்களின் பதவிப் பிரமாணம் ஐந்தாண்டுத் திட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.