முகப்பு
தமிழ்நாடு

31-வது நாளாக உண்ணாவிரதம்: காந்தியவாதி சசிபெருமாளின் உடல்நிலை மோசமடைந்தது

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 31-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதியான சசிபெருமாளின் உடல் நிலை மோசமடைந்தது.

Updated On : 2 மார்ச் 2013, 6:00 am IST
பகிர்:

மதுவிலக்கு கோரி 31-வது நாளாக உண்ணாவிரதம்:காந்தியவாதி சசிபெருமாளின் உடல்நிலை மோசமடைந்தது

சென்னை, மார்ச் 1: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 31-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதியான சசிபெருமாளின் உடல் நிலை மோசமடைந்தது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சசிபெருமாள் மகாத்மா காந்தியின் நினைவு நாளான கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Advertisement

Advertisement

கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் மயிலாப்பூரில் உள்ள தியாகி ஜெபமணியின் இல்லத்தில் உண்ணாவிரத்தைத் தொடரும் சசிபெருமாளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர்.

வாந்தி, மயக்கம் என உடல் நிலை மோசமடைந்தாலும் அவர் 31-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன், மூத்த வழக்குரைஞர் காந்தி உள்ளிட்டோரும் அவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர்.

அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உண்ணாவிரதத்தை சசிபெருமாள் தொடர்ந்து வருகிறார்.

பேச்சு நடத்த குழு: அமைச்சர் உறுதி
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தங்கவேலு, ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கிறிஸ்டினா உள்ளிட்டோர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்தித்து சசிபெருமாள் உண்ணாவிரதம் குறித்து பேசினர்.

அவர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், சசிபெருமாளின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அவருடன் பேச்சு நடத்த அதிகாரிகள் குழு விரைவில் அனுப்பப்படும் என உறுதி அளித்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.