முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகளை வாங்கி விற்றதாக 3 பெண்கள் கைது

மதுரையில் பெற்றோர்களிடம் பணத்தாசை காட்டி குழந்தைகளை வாங்கி விற்றதாக 3 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 22 ஏப்ரல் 2013, 5:31 am IST
பகிர்:

மதுரையில் பெற்றோர்களிடம் பணத்தாசை காட்டி குழந்தைகளை வாங்கி விற்றதாக 3 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 3ஆவது பிரசவத்துக்காக ஏப்ரல் 2ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் காளீஸ்வரி சேர்ந்துள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் நோயாளியாக இருப்பதால் குழந்தையை வளர்க்க சிரமமாக இருப்பதாக காளீஸ்வரி மருத்துவமனையில் பிரவச வார்டில் மருத்துவர்களுக்கு டீ, காபி வாங்கித் தந்துகொண்டிருந்த ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (45) என்ற பெண்ணிடம் கூறியுள்ளார்.

உடனே, ஆறுமுகம், தனக்குத் தெரிந்த பெண்கள் மூலம் குழந்தையை தத்துக் கொடுத்தால் பணம் வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 13ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து காளீஸ்வரி ஆண் குழந்தையுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

அதன்பின்னர் காளீஸ்வரியின் குழந்தையை ஆறுமுகம் ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன்பின் அவர் செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள்களை அழைத்துவரும் தரகரான சாரதா (65) இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் (45) ஆகியோர் மூலம் கான்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வியிடம் ரூ.2.50 லட்சத்துக்கு குழந்தையை விற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை விற்ற பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஆறுமுகம் தரப்பினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும், காளீஸ்வரியும் கூடுதல் பணத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இப்பிரச்னை மதிச்சியம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

காளீஸ்வரி வீட்டிலிருந்து குழந்தை கடத்தப்பட்டதாக மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

அதன்படி குழந்தை மீட்கப்பட்டு காளீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21)  குழந்தை கடத்தப்பட்டதாகவும், அதில் சம்பந்தப்பட்டதாக ஆறுமுகம், சாரதா, பாண்டியம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஒரு குழந்தை விற்பனை: சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் ராதிகா. இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் பிரவசத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையை காணவில்லை என புகார் கூறப்பட்டது.

தற்போது அக்குழந்தையும் ஆறுமுகம் தரப்பினரால் வாங்கி ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் விற்கப்பட்டதாக தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.