மரக்காணம் கலவரம் பற்றி நீதி விசாரணை: உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு
மரக்காணம் கலவரம் மற்றும் அதன் பின் நடைபெற்ற தொடர் நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை
மரக்காணம் கலவரம் மற்றும் அதன் பின் நடைபெற்ற தொடர் நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
போலீஸார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதால் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றன. மேலும், மரக்காணம் கலவரத்தின்போது ஏராளமான வாகனங்கள் கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் யார் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அதேபோல் கலவரத்தின்போது வன்னியர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டது பற்றியும் முறையான விசாரணை நடத்தவில்லை.
Advertisement
Advertisement
காவல் துறையினரின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவித்தோம். முதலில் அனுமதி அளித்த காவல் துறையினர், பின்னர் அந்த அனுமதியை ரத்து செய்ததோடு, பா.ம.க.வைச் சேர்ந்த 363 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அருகிலேயே கடலூர், சென்னை போன்ற இடங்களில் மத்திய சிறைகள் இருந்தபோதிலும், 73 வயதான எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாûஸ அலைக்கழித்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறையில் அடைத்தனர். மாநிலத்திலேயே அதிக கோடை வெப்பம் நிலவும் திருச்சி சிறைக்கு வேண்டுமென்றே அவர் கொண்டு செல்லப்பட்டார். 363 பேரை அடைத்து வைக்க போதுமான வசதிகள் இல்லாதபோதும் அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி சிறையில் இருந்தபோது டாக்டர் ராமதாஸ் பல சித்திரவதைகளுக்கு ஆளானார். அதனால் தற்போது அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நூற்றுக்கணக்கான பா.ம.க. தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. இதுவரை சுமார் 100 பா.ம.க.வினர் குண்டர்கள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் வசிக்கும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த அப்பாவித் தொண்டர்கள் பலரை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்து சித்திரவதை செய்கின்றனர். பேச்சுரிமை, கருத்துக் கூறும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நசுக்கும் விதத்தில் போலீஸார் செயல்படுகின்றனர்.
ஆகவே, பா.ம.க. தொண்டர்களை இனியும் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். மேலும், மரக்காணம் கலவரம், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை பற்றி ஆராய உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் ஜி.கே.மணி கோரியுள்ளார்.