ஆற்றைக் கடக்க அவதிப்படும் 50 கிராம மக்கள்
திருத்தணி நந்தியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி நந்தியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெரு அருகே ஓடுகிறது நந்தி ஆறு.
திருத்தணியைச் சுற்றியுள்ள விநாயகபுரம், காசிநாதபுரம், வேலஞ்சேரி, பட்டாபிராமபுரம், மேதினாபுரம், நாணமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
Advertisement
Advertisement
அப்பகுதிகளிலிருந்து வருபவர்கள், நந்தியாற்றைக் கடந்தே திருத்தணி நகருக்கு செல்ல வேண்டும். மேலும் அப்பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களும் நாள்தோறும் இந்த ஆற்றைக் கடந்தே திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
ஆபத்தின் விளிம்பில்... இந்நிலையில் மழைக்காலங்களின் போது நந்தியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த சமயங்களில் ஆற்றைக் கடக்க இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில நேரங்களில் ஆற்றில் தண்ணீரின் வேகமும் அதிகரிப்பதால் பெரும் ஆபத்துக்கு மத்தியில் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் ஆற்றைக் கடக்கின்றனர்.
தரைப்பாலம் கட்டப்படுமா?
நந்தி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என 50 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பொருட்டு மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் இப்பகுதிக்கு பல முறை வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
ஆனால் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
எனவே 50 கிராம மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, திருத்தணி நந்தியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.