மாமல்லபுரத்தில் பலத்த மழை
மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் பகுதிகளில் புதன்கிழமையும் தொடர்ந்து மழை பெய்ததால், அப் பகுதியில் மக்களின் நடைமுறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் பகுதிகளில் புதன்கிழமையும் தொடர்ந்து மழை பெய்ததால், அப் பகுதியில் மக்களின் நடைமுறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வானிலையில் மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் பருவமழையை அடுத்து மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதனால் மாமல்லபுரத்தில் தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்பவர்களும், நடைபாதை வியாபாரிகளும் மழையின் காரணமாக வருவாய் இன்றித் தவிக்கும் சூழ்நிலை உள்ளது.
Advertisement
மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மற்றும் ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில் பகுதிக்குச் செல்லும் பாதையிலும் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதிகளில் அத் துறை சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கம்பி வேலிகள் போட்டுள்ளதால் குறைந்த இடங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் மழைநீர் குளங்கள்போல் தேங்கிக் கிடப்பதால் அப்பகுதிகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்யவோ, நடந்துச் செல்லவோ வழியில்லை.
அதே போன்று திருப்போரூர், திருக்கழுகுன்றம் பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக விட்டு விட்டு பெய்த்துவரும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு -திருப்போரூர் செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களும் குழிகளும் உருவாகியுள்ளதால் வாகனப் போக்குவரத்து சிரமத்துடன் இயங்குகிறது.
இதன் காரணமாக பஸ்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் காலதாமதமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் பஸ்ஸýக்காக பல மணிநேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
செங்கல்பட்டில் பலத்தமழை பெய்யாவிட்டாலும் தூறல் காரணமாக ராஜாஜி சாலை, வேதாசலநகர் சாலை, மார்க்கெட் பகுதிகளில் சிமென்ட் சாலைகள் உள்ளிட்டவை சமீபத்தில் போடப்பட்டிருந்தும் சாலைகள் சேரும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறியுள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் அதில் மழைநீர் தேங்கி, கழிவுநீரும் மழைநீருடன் சாலைகளில் தேங்கியுள்ளதால் சாலை எது? கால்வாய் எது? என்று தெரியாமல் நடந்துச் செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.