குரங்கணி தீ விபத்து: பெல்ஜியம் பிரமுகரை கைது செய்ய இடைக்காலத் தடை
குரங்கணி தீ விபத்து வழக்கில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
குரங்கணி தீ விபத்து வழக்கில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை டிரெக்கிங் கிளப் என்ற அமைப்பில் உள்ள பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் மீது குரங்கணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கோரி பீட்டர் வான் கெய்ட், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையில் உள்ள சில தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங் கிளப் (சிடிசி) எனும் அமைப்பை 2013 ஆம் தொடங்கி நடத்தி வருகிறோம். இந்த அமைப்புக்கு யாரும் தலைமை வகிக்கவில்லை. யாரிடமும் நன்கொடைகள் வசூலித்ததில்லை. எங்கள் அமைப்பின் சார்பில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போதும், வர்தா புயல் பாதிப்பின் போதும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளோம்.
இந்நிலையில் இந்த அமைப்பில் உள்ள திவ்யா முத்துக்குமார், நிஷா ஆகியோர் மகளிர் தினத்தையொட்டி கொழுக்குமலை மற்றும் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு அமைப்பில் உள்ள அனுபவசாலிகளான அருண் பிரபாகர் மற்றும் விபின் தாமோதரன் ஆகியோர் உதவி செய்தனர். முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் காட்டுக்குள் சென்றுள்ளனர். ஆனால், குரங்கணியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். 27 பேரையும் காட்டுக்குள் அனுமதிக்க வனத்துறையினர் கட்டணம் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீது இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வரிடம் தான் இருந்துள்ளது. அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்ட விரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினரும், போலீஸாரும் கூறி வருகின்றனர்.
மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்நிலையில் மலையேற்றப் பயிற்சிக்கு தலைமை வகித்ததாகக் கூறி குரங்கணி போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் தவறானது. எனவே இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளிக்க அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஒரு பெண் சாவு
குரங்கணி தீ விபத்தில் சிக்கி சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழந்தார். இதனையடுத்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
குரங்கணி வனத்துக்கு மார்ச் 11-ஆம் தேதி சுற்றுலா சென்ற பயணிகள் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினர். விபத்தில் சிக்கி காயமடைந்தோர் தேனி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா (28) என்ற இளம்பெண், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 22-ஆம் தேதி மாற்றப்பட்டார்.
அவர் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார். இத்துடன் குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.