முகப்பு
தமிழ்நாடு

மெட்ராஸ் ரேஸ் கிளப் சொத்து விற்பனை ஒப்பந்தம்: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:31 am IST
பகிர்:

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்குச் சொந்தமான 5.566 ஏக்கர் பரப்பிலான சொத்துக்கள், கடந்த 2006 -ஆம் ஆண்டு டிஎல்எஃப் யுனிவர்சல் லிமிடெட் நிறுவனத்துக்கு 4 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 
அப்போது அந்த நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ.60 கோடியை கிளப்புக்குச் செலுத்தியது. குத்தகை தொகையினை ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிலையில், ரேஸ் கிளப்புக்குச் சொந்தமான சொத்துக்களை வாங்க டிஎல்எஃப் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. கிளப்புக்குச் சொந்தமான சொத்துக்களை ரூ.325 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி தொகையை டிஎல்எஃப் நிறுவனம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து நடந்த சமரசத்துக்குப்பின் டிஎல்எஃப் நிறுவனம் ஏற்கெனவே செலுத்திய ரூ.60 கோடியுடன் மேலும் ரூ.300 கோடியைச் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
இந்த நிலையில், மெட்ராஸ் ரேஸ் கிளப் உறுப்பினர் எ.விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இந்த ஒப்பந்தத்தால் கிளப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஸ்வநாதன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 
இந்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் மனுதாரர் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் எந்தக் கேள்வியையும் மனுதாரர் எழுப்பவில்லை.
இந்த வழக்கின் விசாரணையில்கூட மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கும், டிஎல்எஃப் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்த விவகாரத்தில் நலமான சூழல் நிலவுவதாகவே வாதிடப்பட்டது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments