கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் பூமி பூஜையுடன் புதன்கிழமை தொடங்கின.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் பூமி பூஜையுடன் புதன்கிழமை தொடங்கின.
கீழடிப் பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 -ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் (2014-17) நடைபெற்ற அகழாய்வில், தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பாலான போர்க்கருவிகள், உறை கிணறுகள், வெளிநாட்டுடன் வணிகத்தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளாமான தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மூன்றாம் கட்ட அகழாய்வின்போது, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சதுர மற்றும் வட்ட வடிவிலான செப்பு காசுகள், தங்க பொருள்கள், மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்தன. ஆனால், முதலில் நடத்தப்பட்ட இரண்டு அகழாய்வுப் பணிகளில் வெளிப்பட்ட கட்டடங்களின் தொடர்ச்சி கிடைக்காதது, அப்போதைய நிலையில் ஏற்பட்ட அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையினர் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 4 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படவிருந்தது. ஆனால், விவசாயிகள் தங்கள் நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகை வழங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் பணிகள் தொடங்குவது தாமதமானது. மாவட்ட நிர்வாகத்தின் சமாதான முயற்சியைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இதில், தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குநர் ஜீவானந்தம், கண்காணிப்பாளர் சக்திவேல், உதவிப் பொறியாளர் ஒலி மாலிக், திருப்புவனம் வட்டாட்சியர் கமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தினர். வியாழக்கிழமை (ஏப்.19) முதல் அகழாய்வுப் பணிக்கான குழிகள் தோண்டும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.