அனுபவம் இல்லாதவர்களை துணைவேந்தராக நியமிக்கக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ்
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அனுபவம் இல்லாதவர்களை நியமிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அனுபவம் இல்லாதவர்களை நியமிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017-ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட பி.பி. செல்லத்துரை 2018-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான குழுவை இறுதி செய்வதில் ஏராளமான குழப்பங்கள் நிலவிய நிலையில், அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு 14 பெயர்கள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மூன்றாம் கட்டமாக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் இருந்து ஒருவரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தமிழக ஆளுநர் நியமிப்பார்.
இரண்டாம் கட்ட பட்டியலில் தகுதியற்ற பலரும், அனுபவம் இல்லாத பலரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
துணைவேந்தர் பணிக்கான அடிப்படைத் தகுதி முனைவர் பட்டமும், குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவமும் ஆகும். இவற்றுடன் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிர்வாகத் திறமையும் வேண்டும்.
ஆனால், இவை இல்லாத சிலரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன.
துணைவேந்தர் நியமனம் என்பது கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டும் தான் மேற் கொள்ளப்பட வேண்டும்.
இந்த நடைமுறைகள் காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
துணைவேந்தர் பதவியிலிருந்து செல்லத்துரை நீக்கப்பட்டதற்கு காரணமே அவருக்கு பேராசிரியர் பணி அனுபவம் இல்லை என்பது தான். மீண்டும் ஒருமுறை அதே தவறை செய்து காமராஜர் பல்கலைக்கழகத்தை முடக்க காரணமாகிவிடக் கூடாது.
இதை மனதில் கொண்டு துணைவேந்தர் நியமனத்தில் தேர்வுக்குழுவும், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.