முகப்பு
தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்: மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் அப்பெண் பாதிக்கப்பட்டதை அடுத்து, ரத்த வங்கி பெண் ஊழியர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து,

Updated On : 26 டிசம்பர் 2018, 4:16 am IST
பகிர்:


சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் அப்பெண் பாதிக்கப்பட்டதை அடுத்து, ரத்த வங்கி பெண் ஊழியர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். 
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் தங்கபாண்டி (27) - முத்து (23) தம்பதி. இவர்களுக்கு, ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முத்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். 
பத்து நாள்களுக்கு முன், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்ற முத்துவுக்கு, ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதாகவும், அதனால் ரத்தம் ஏற்றவேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார். அதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு, முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். ஆனால், ரமேஷ் ரத்தத்தை பரிசோதிக்காமல் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து, சேமித்து வைத்துள்ளனர். பரிசோதிக்காத இந்த ரத்தம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 
இதனிடையே, ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக, மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதில், ரமேஷுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, ரமேஷ் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதாகவும், தான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இச்சம்பவம் குறித்து, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மனோகரன் கூறியது: 
ரத்தத்தை பரிசோதிக்காமல் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது குறித்து ரத்த வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச் சம்பவம் தொடர்பாக அலட்சியமாக இருந்த சிவகாசி ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் முத்து கூறியது: கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய பின்னர், எனக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. உடனே, சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு, பரிசோதித்ததில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு, யாரும் கண்டுகொள்ளவும் இல்லை, சிகிச்சை அளிக்கவும் இல்லை. 
எனவே, திங்கள்கிழமை விருதுநகர் இணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு, எனது கணவருக்கு வேலை தருவதாகக் கூறினர். ஆனால், சிகிச்சை பற்றி எதுவும் கூறவில்லை. எனவே, எனக்கு ஹெச்ஐவி பாதிப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், எனக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், நிவாரணமும் வழங்கவேண்டும் என அப்பெண் வலியுறுத்தியுள்ளார்.


கண்டுகொள்ளாத அரசு மருத்துவ அலுவலர் 
ரத்த தானம் செய்த சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சமூக நல ஆர்வலர். இவர், அப்பகுதியில் தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த போது, இவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அப்போதே, இவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 
ஆனால், அப்போது அங்கு மருத்துவ அலுவலராக இருந்தவர், இது குறித்து ரமேஷிடம் தகவல் தெரிவிக்கவில்லையாம். இதையறியாமல், ரமேஷும் தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடு செல்வதற்காக மதுரையில் ரத்த பரிசோதனை செய்துகொண்ட போதுதான் தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதை அறிந்துள்ளார் ரமேஷ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments