மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: தாமதமாகும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு இன்னமும் ஒதுக்கீடு செய்யாமல்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு இன்னமும் ஒதுக்கீடு செய்யாமல் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசு ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களில் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அத்திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
மொத்தம் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும் ஏழை மக்கள் இனி மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அத்திட்டத்தை தொடங்கியபோது பிரதமர் தெரிவித்தார். மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக ரூ.10,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஏற்கெனவே முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருப்பதால், அதனுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காப்பீட்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
இதற்காக செலவிடப்படும் தொகையில் குறிப்பிட்ட ஒரு பகுதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக இதுவரை ரூ.11 கோடியை மட்டுமே மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கியுள்ளதாகவும், சுமார் ரூ.350 கோடி நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம், தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்றளவும் அந்த நிதியானது விடுவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாநில அரசு, தனது காப்பீட்டு வைப்பு நிதியில் இருந்து ரூ.20 கோடியை செலவு செய்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத்துறை திட்ட அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தாமதமானாலும், அதனால் தமிழகத்தில் ஒரு பயனாளி கூட பாதிக்கப்படவில்லை; மாநில அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததே அதற்குக் காரணம். விரைவில் காப்பீட்டுத் திட்ட நிதியை விடுவிப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.