ஆற்றில் தொடர் நீர்வரத்து: 17 நாள்களாக முழுக் கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து வருவதால் கடந்த 17 நாள்களாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நீடிக்கிறது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து வருவதால் கடந்த 17 நாள்களாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த அணை கொள்ளளவான 69 எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து இருபோக பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்தது. இதன்பின் அக்டோபர் மாதம் தேனி மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த அக். 21 ஆம் தேதி மீண்டும் 69 அடியை எட்டியது. வைகை அணை இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் முழுக்கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1981 ஆம் ஆண்டு இந்த அணை இரண்டு முறை நிரம்பியது. அதன்பின் 37 ஆண்டுகள் கழித்து தற்போது இருமுறை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து சராசரியாக வினாடிக்கு 2,000 கன அடிக்கும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 17 நாள்களாக 69 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழுக்கொள்ளளவில் நீடிப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,395 கன அடியாகவும் உள்ள நிலையில் இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 5,571 மில்லியன் கனஅடியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.