தீபாவளி பண்டிகை: ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய
மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.
இந்த நன்னாளில் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில்,
ஒளிகள் சிந்தும் உவப்பான திருவிழாவான தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். மகிழ்ச்சியையும், கொண்டாட்டங்களையும் நினைத்து மட்டும் தான் பார்க்க முடியுமோ? எனும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளுக்கு ரூ.700 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,500 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை. வறுமை வாட்டுவதும், வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை துரத்துவதும் வாடிக்கையானதாகி விட்டன.
தீப ஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படுவதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். அத்தகைய இலக்கை நோக்கி உழைக்க தமிழக மக்கள் அனைவரும் ஒளி நிறைந்த இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில்,
ஆண்டிற்கு ஒரு நாள் வருவது தீபாவளி திருநாள். அன்று எண்ணெய் குளியல் செய்துவிட்டு, புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி பட்டாசு கொளுத்தி பெற்றோர்களுடனும், பிள்ளைகளுடனும் மகிச்சியோடு தீபாவளி திருநாளை கொண்டாடுவது வழக்கம்.
தீமையை அகற்றி, நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாகவே விளக்கேற்றி வைக்கும் ஒளித் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சாதாரண மக்களில் இருந்து, பெரும் பணக்காரர்கள் வரை தீபாவளி கொண்டாடவே ஆசைப்படுகின்றனர். விழாக்களும், பண்டிகைகளும் வருகிறது என்றாலே,
ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக யாரிடம் கடன் வாங்குவதென்ற கவலையே அடைகின்றனர். உணவுப் பண்டங்களின் விலை மட்டுமல்ல, ஆடைகள் மற்றும் பட்டாசுகள் என்று எதை வாங்கச் சென்றாலும் அவையெல்லாம் அதிகமான விலையிலேயே விற்கப்படுகின்றன.
தங்களுடைய வருமானம் அன்றாட குடும்பச் செலவிற்கே சரியாகி விடுவதால் இதுபோன்ற பண்டிகைகளை கொண்டாட சிரமப்படும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர். எனினும் இருப்பதைக் கொண்டு தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்திட மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்றும் தேமுதிக சார்பில் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தனது வாழ்த்துச் செய்தியில்,
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரே சமயப் பண்டிகை. இந்து, சமண, சீக்கிய சமயத்தார் வெவ்வேறு காரணங்களுக்காய்
இந்நாளில் கொண்டாடினாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் ஓரே பண்டிகை இதுதான். உலகெங்கும் வாழும் இந்தியர்களால் தீபாவளி திருநாள்
கொண்டாடப்படுவதால், இத்திருநாளை முன்னிட்டு இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர் மலேசியா, பிஜி ஆகிய நாடுகளின்
அரசுகளும்; இந்நாளிற்கு அரசு விடுமுறை அளிக்கிறது.
நரகாசுரன் என்ற அசுரன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். அவன் பூமாதேவியின் புதல்வன் என்பதால் அவனை யாராலும் வெல்ல இயலவில்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் சத்யபாமாவை அழைத்துக் கொண்டு தேர் ஏறி நரகாசுரனுடன் போர் செய்தார். தாய் அம்சம் கொண்ட பெண்ணால் மட்டுமே அவனை வெல்ல முடியும் என்பது பிரம்மா அவனுக்கு அளித்த வரம். எனவே கிருஷ்ணரால் நரகாசுரனை வதம் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் நரகாசுரனின் தாக்குதலால் கிருஷ்ணர் மூர்ச்சை ஆனதைப்போல் கிடந்தார். இதைப் பார்த்த சத்தியபாமா வெகுண்டு எழுந்து வில்லெடுத்து நரகாசுரனை வதம் செய்து அழித்தார். அவனை அழித்த பிறகு தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார். நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனை கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீப மேற்றி கொணடாட வேண்டும், ஒருவர் இறந்த பின் செய்யும் எண்ணெய் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும் என வரம் பெற்றார் என்பது ஐதீகம்.
தீபாவளித் திருநாள் உலகிலிருந்து தீய செயல்களைப் போக்கி நற்செயல்களை நிலை நாட்டுவதனை அடிப்படையாக கொண்டுள்ளதால் உலகெங்கிலும்
வாழும் மக்கள் பலராலும் இத் திருநாள் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப் பட்டு வருகிறது. இதிகாச கால நரகாசுரன் அழிந்தாலும், இன்னும் பல நரகாசுரர்கள் மத்தியில் சிக்கி அல்லல் படும் நம் மக்கள் விரைவில் மீண்டு மகிழ்வோடு வாழ தீமையை ஒழித்து நன்மையை வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் சபதம்
மேற்கொள்ள வேண்டும்.
இத் திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி விளக்குகளால் உருவாகும் ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதே போன்று மக்களின் மனங்களிலும்,
வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ்
சார்பிலும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தனது வாழ்த்துச் செய்தியில்,
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை தீப ஒளித்திருநாளாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. இருள் நிறைந்த நாள் அமாவாசை. அன்று வருவது தான் தீபாவளி. அன்று விளக்கு ஏற்றுகிறோம். அதனால் இருள் மறைகிறது; ஒளி பரவுகிறது. நல்லது நடக்க வழி பிறக்கிறது. மகிழ்ச்சியும், மன நிறைவும்
ஏற்படுகிறது. இது தான் தீப ஒளிப்பண்டிகையின் தத்துவம்.
தீபம் எப்பொழுதும் மேல் நோக்கியே சுடர்விடும். அது போல் தீபாவளித் திருநாள் நம் அனைவரையும் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் வழி வகுக்கும். இது நம்பிக்கை. ஒரு விளக்கு எரிந்தால், அதனைக்கொண்டு ஓராயிரம் விளக்குகள் ஏற்றலாம். நல்லது ஒன்று செய்தால், ஓராயிரம் நன்மைகள் விளையும். இதுவும் உண்மையே!.
அண்ணல் காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் வந்த இந்த ஆண்டில், நல்லவை நடக்க வேண்டும்; அல்லாதவை அகல வேண்டும், அன்பும், அரவணைப்பும் மலர வேண்டும், வெறுப்பும் பகைமையும் மறைய வேண்டும். ஏழைகள் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும்; இல்லாமை கல்லாமை, சண்டை, சச்சரவு, மதவாதம், தீவிரவாதம் மறைய வேண்டும்.
நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும்; தன்னலம் பேணும் அதிகார வர்க்கத்தின் மனம் மாற வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும்; நேர்மை, நாணயம், ஒழுக்கம், தியாக உணர்வு - ஆகிய நெறிகள் பொது வாழ்வில் கடைப்பிடிக்க வழி பிறக்க வேண்டும். புது விளக்கு ஏற்றி, புத்தாடை புனைந்து, பட்டாசு வெடித்து, பல்சுவை உணவு உண்டு இன்று மகிழ்வது போல் என்றும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி தொடர வேண்டும்.
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் த.மா.கா. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனது வாழ்த்துச் செய்தியில்,
வெளிச்சத்தின் திருவிழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.
தீப ஒளித் திருநாளின் போது மக்களிடையே நிலவும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.