பொதுமக்களிடம் முதலீடு பெற்று மோசடி: நிறுவன நிர்வாகிகளின் முன்ஜாமீன் ரத்து
பொதுமக்களின் முதலீட்டுப் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து
பொதுமக்களின் முதலீட்டுப் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கித் தருவதாக பொதுமக்களிடமிருந்து ஒரு தனியார் நிறுவனம் முதலீடுகளை பெற்றது. சுமார் 12 லட்சம் பேர், ரூ.1,137 கோடிக்கு மேல் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீட்டுத் தொகை முதிர்வடைந்த நிலையில் பலருக்கு நிலம் தரப்படாததால் பல்வேறு காவல் நிலையங்களில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சுமார் 3 லட்சம் பேருக்கு ரூ.500 கோடி வரை திருப்பி வழங்கிய இந்த நிறுவனம், பலருக்கு பணத்தை திரும்பத் தரவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக, ஜம்மு - காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஜனார்த்தனன், உமா மகேஸ்வரன், அருண் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் நிர்வாகிகள் ஜனார்த்தனன் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்காததால் நிர்வாகிகள் 3 பேருக்கும் ஏற்கெனவே வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மதுரை நீதிமன்றத்தில் 3 பேரும் வரும் 8 -ஆம் தேதி சரணடைய வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.