போட்டித் தேர்வை தமிழில் நடத்த மறுப்பு: ராமதாஸ் கண்டனம்
காவல் துறையின் கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழில் நடத்தப்படாததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல் துறையின் கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழில் நடத்தப்படாததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல் துறையின் கைரேகைப் பிரிவுக்கு 202 சார்பு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்தப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. போட்டித் தேர்வுகள் எந்த மொழியில் நடத்தப்படும் என்று தேர்வர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும், தமிழில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறது. இந்த முடிவு தேர்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழகக் காவல் துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு 309 சார்பு ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான விடைத்தாள்களும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன.
2015-ஆம் ஆண்டு வரை காவல் துறையின் தொழில்நுட்பப் பிரிவு, கைரேகைப் பிரிவுக்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான போட்டித்தேர்வுகள் தமிழில் நடத்தப் பட்டு வந்தன. அந்த நடைமுறையைக் கைவிட்டு ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
எந்த ஒரு மாநிலத்திலும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை அந்த மாநில மொழியில் எழுதுவது அம்மாநில மொழி படித்த மாணவர்களின் அடிப்படை உரிமை ஆகும்.
எனவே, போட்டித் தேர்வை தமிழ் மொழியில் நடத்தவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.