முகப்பு
தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்தின் காலத்தை நான்காவது முறையாக மேலும் 4 மாதம் கால

Updated On : 25 பிப்ரவரி 2019, 2:09 pm IST
பகிர்:


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்தின் காலத்தை நான்காவது முறையாக மேலும் 4 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்தின் காலத்தை நான்காவது முறையாக நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆறுமுகசாமி கடிதம் எழுதியிருந்தார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 -ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த நவம்பர் 22 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.

Advertisement

Advertisement

முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் கடந்த 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, அதாவது 2018  ஜூன் 24  வரை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.

கடந்த 2018  ஜூன் 25 -ஆம் தேதியில் இருந்து கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலம் இரண்டாம் முறை 4 மாதங்களுக்கும்,  இதையடுத்து, மூன்றாம் முறையாக கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து வரும் பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

ஆணையத்தின் காலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆணையமும், சசிகலா தரப்பு வழக்குரைஞர்களுக்கும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் ஆணையத்தின் காலத்தை நான்காவது முறையாக நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதி உள்ளதாகத் தகவல் வெளியானது. 

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழை பிப்ரவரி 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை நான்காவது முறையாக மேலும் 4 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 150 -க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.