சேவைக் குறைபாடு: தனியார் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
சரியாகப் பாடம் நடத்தாத மதுரவாயிலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரியாகப் பாடம் நடத்தாத மதுரவாயிலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி திவாகரன். இவர், சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2005-இல் மதுரவாயலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ரூ. 87 ஆயிரம் செலுத்தி பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.
அந்தக் கல்வி நிறுவனத்தின் வகுப்பறையில் மழைநீர் புகுந்ததாலும், பேராசிரியர்கள் பற்றாக்குறையாலும் கல்லூரிக்கு நீண்ட நாள்கள் விடுமுறை விடப்பட்டது. வகுப்புகளும் முறையாக நடத்தப்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்த நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதுடன் வேறு கல்லூரியில் படிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, நான் செலுத்திய கட்டணத்துடன் அந்தக் கல்வி நிறுவனம் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர்மன்ற நீதிபதி பாஸ்கரன், நீதித் துறை உறுப்பினர் லதா மகேஸ்வரி ஆகியோர் அளித்த உத்தரவில், அந்தக் கல்வி நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரரான ரேஷ்மி திவாகருக்கு கல்விக் கட்டணமாக வசூலித்த ரூ. 87 ஆயிரத்துடன், இழப்பீடாக ரூ. 5 லட்சம், வழக்குச் செலவாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.