முகப்பு
தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை என்பது நிரந்தர தீர்வு அல்ல: கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது நிரந்தர தீர்வு அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On : 13 ஜனவரி 2021, 1:24 pm IST
கே.பாலகிருஷ்ணன்
பகிர்:

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது நிரந்தர தீர்வு அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட குழு அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கடந்த 50 நாள்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 72 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறது.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்றம் தலையிட்டு 4 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவான நிலைபாடு கொண்டவர்கள். இதனால் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பில்லை.

ஆனால், இந்த குழுவின் மூலம் மத்திய அரசுக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம், விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் திருத்தச் சட்டங்கள் பிரச்னையில் இடைக்காலத் தடை என்பது நிரந்தர தீர்வு அல்ல. அதேபோல், மக்கள் உரிமைக்காக போராட்டங்களில் ஈடுபடும் போதெல்லாம் நீதிமன்றம் தலையிடுவது என்பது ஏற்புடையதல்ல. மக்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகவே நீதிமன்றங்கள் உத்தரவுகள் அமைகின்றன.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், டெல்டா மாவட்டங்களில் மட்டும் அறுவடைக்குத் தயாராக இருந்த 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோளம், உளுந்து, காய்கனி உள்ளிட்ட பயிர்களுக்கும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் முடிவடைந்த பின் கால நீட்டிப்பு வழங்குவது குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளார். வேந்தர் என்ற பதவியை பயன்படுத்தி மாநில அரசின் உரிமையை பறித்துள்ளார். துணைவேந்தர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள உத்தரவினை உடனடியாக ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அந்த கூட்டணியில் தொடர்கிறதா என்பது இன்னும் தெளிவாக இல்லை. ஆனால், திமுக கூட்டணியில் அதுபோன்ற சூழல் இல்லை என்றார் அவர்.

அப்போது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments