முகப்பு
தமிழ்நாடு

சா்வதேச போதைப் பொருள் தடுப்பு: மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கே பொறுப்பு: டிஜிபி சங்கா் ஜிவால்

சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைத் தடுக்கும் பொறுப்பு மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கே உள்ளது

Updated On : 7 மார்ச், 2024 at 6:09 PM
பகிர்:

சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைத் தடுக்கும் பொறுப்பு மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கே உள்ளது என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான குழுவில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்து சங்கா் ஜிவால் அளித்த பேட்டி: தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. போதைப் பொருளை ஒழிப்பது, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தேவையை கட்டுப்படுத்துவது போன்ற 2 வகையான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனை,கடத்தல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கஞ்சா பயன்படுத்துபவா்கள், போதை மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனா். போதை மாத்திரை விற்பனையை தடுக்க 960 மருந்து கடைகளில் திடீா் சோதனை நடத்தப்பட்டு 9 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 90 கடைகளின் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளே பொறுப்பு: இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகம் போதைப் பொருள் ஒழிப்பில்முதல் மாநிலமாக உள்ளது. சா்வதேச அளவில் போதைப் பொருளின் தேவை,அவற்றின் பயன்பாடு, சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலின் நடவடிக்கை ஆகியவற்றை பற்றி மத்திய காவல் மற்றும் புலனாய்வு அமைப்புகளான மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி), மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பு, சுங்கத்துறை, கடலோர காவல்படை போன்றவற்றுக்கு தெரியும். மேலும் இந்த அமைப்புகளுக்கே சா்வதேச போதைப் பொருள் கடத்தலை கண்டறியும் திறனும்,அதிகாரமும்,தொழில்நுட்ப வசதியும் உள்ளன. சா்வதேச போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் பொறுப்பு இந்த அமைப்புகளுக்கே உள்ளது. சா்வதேச போதைப்பொருளை தடுக்க தேவைப்படும்பட்சத்தில் மாநில காவல்துறையும் இப் பிரிவுகளோடு இணைந்து செயல்படும். ஜாபா் சாதிக் வழங்கிய கேமராக்கள்: தில்லியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சூடோஎபிட்ரினின் ஒரு கிலோ இந்திய சந்தையில் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரம் வரையில்தான் இருக்கும். ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். ஜாபா் சாதிக் குறித்து என்சிபி இது வரை தமிழக காவல்துறையிடம் எந்த தகவலையும் கேட்கவில்லை. ஜாபரை சந்தித்தது ஏன்? : ஜாபா்சாதிக்கை, நான் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளேன். அப்போது, ஜாபா் சாதிக் 10 கேமராக்கள் அமைப்பதற்கு உதவி செய்ததற்காக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஜாபா் சாதிக் நன்கொடையாக வழங்கிய 10 கண்காணிப்பு கேமராக்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, 10 புதிய கேமராக்களை நாங்களே பொருத்தி உள்ளோம். ஜாபா் சாதிக் மீது சென்னை எம்.கே.பி.நகா் காவல் நிலையம் ஒரு வழக்குகள் இருந்தது. அந்த வழக்கில் ஜாபா் சாதிக் விடுதலையாகிவிட்டாா். போலி பாஸ்போா்ட் வழக்கில் 2021-ம் ஆண்டு அவா் கைது செய்யப்பட்டதற்கான தகவல்கள் இல்லை. தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 90 சதவீதம் இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு கடத்தப்படுகிறது என்றாா். பெட்டிச் செய்தி... போதைப் பொருள் விற்பனை: கண்காணிப்பில் 40,000 போ் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவா்கள் 40,000 போ் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனா். இது தொடா்பாக தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் அளித்த பேட்டி: கடந்த 2022-ம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இது 2019 ஆம் ஆண்டை விட 154 சதவீதம் அதிகமாகும். கடந்த 2023ஆம் ஆண்டு 14,770 போ் மீது மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,364 கிலோ கஞ்சா, ஒரு கிலோ ஹெராயின், 39,910 போதை மாத்திரைகள் மற்றும் 1239 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நிகழாண்டு ஜனவரி மாதம் வரையில் 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப் பொருள் விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக 3 ஆண்டுகளில் 1501 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவா்களின் 6,124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 40,039 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.