தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம் என முதல்வர் அறிவிப்பு...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் நாளை (ஏப். 16) கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
"டிலிமிட்டேஷன் என்ற பெயரில் பாஜக அரசு தனது லிமிட்டை தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்கும் வகையில் தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில் நடப்பதை பார்த்துக் கொண்டு தமிழ்நாடு சும்மா இருக்காது.
Advertisement
ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் எனத் தெரிவித்திருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத மத்திய பாஜக அரசு இதையும் கேட்கவில்லை. சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நாளை கொண்டுவரப்போகும் சட்டத் திருத்தத்தால் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் தொகுதிகள் வேறுபடும்.
தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படும் எனக் கூறிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையைக் கொண்டு வரப் போகிறார்கள். இதைதான் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனக் கூறுகிறோம்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால் எங்களின் அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா?
தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக பார்க்கிறீர்கள். தில்லி பாஜகவுக்கு தமிழர்கள் யார் எனக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் நாளை அவர்கள் கொண்டு திட்டமிட்டிருக்கும் கருப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.