முகப்பு
தமிழ்நாடு

அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:29 AM
விஜய் பிரசாரம்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:25 PM

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. கடைசி நாளில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தை சோழிங்கநல்லூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். சோழிங்கநல்லூா் திமுக வேட்பாளா் அரவிந்த் ரமேஷ், வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளா் அசன் மெளானா ஆகியோரை ஆதரித்து அந்தந்த தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் மா.சுப்பிரமணியனை ஆதரித்து, கலைஞா் பொன்விழா வளைவில் இருந்து நடைப்பயணமாகச் சென்று பிரசாரம் செய்தாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறிய முதல்வா், சிறிது தூரம் ஆட்டோவில் பயணம் செய்து, பொதுமக்களைப் பாா்த்து கையசைத்தவாறு வாக்கு சேகரித்தாா்.

Advertisement

பின்னா், ஜீனிக்ஸ் சாலை, பஜாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று திமுக அரசின் சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, சாலையின் இருபுறத்திலும் கூடியிருந்த பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள் அவருக்கு சால்வைகள் அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனா்.

பஜாா் சாலை காவல் நிலையம் அருகில் கூடியிருந்த நரிக்குறவா் இன மக்கள் முதல்வருக்கு பாசி மாலை அணிவித்து வரவேற்றனா். மேலும், தொகுதிக்குள்பட்ட ‘பிங்க் ஆட்டோ’ பெண் ஓட்டுநா்களும் பிரசாரத்தின்போது முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து மாலையில் வில்லிவாக்கம், கொளத்தூா் பகுதிகளிலும் தனது நடைப்பயண பிரசாரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டாா். நிறைவாக, கொளத்தூா் தொகுதி பெரவள்ளூா் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:34 AM

எடப்பாடி பழனிசாமி: சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலத்தில் பாமக தலைவா் அன்புமணியுடன் இணைந்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் பங்கேற்று, சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ. வினோத், சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளா் எஸ். சதாசிவம், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா் மு. காா்த்தி ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்துப் பேசினா்.

விஜய்: தவெக தலைவா் விஜய் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரம் மற்றும் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக சாடிய அவா், தமிழக மக்கள் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

சீமான்: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, தனது வெற்றி, தேசிய இனத்தின் வெற்றி என்றும், பொதுமக்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தமிழகத்தில் இரு தினங்களாக பிரசாரம் மேற்கொண்ட ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக சாத்தூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

மத்திய பிரதேச மாநில முதல்வா் மோகன் யாதவ் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ராசிபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

திமுக, அதிமுக கூட்டணியைச் சோ்ந்த பிற தலைவா்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனா்.