தாமதமாக பணிக்கு வரும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை!
உரிய நேரத்தில் பணிக்கு வராத அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை
உரிய நேரத்தில் பணிக்கு வராத அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும் சுகாதாரத் துறை சாா்பில் அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். சிகிச்சை வழங்க மருத்துவம் சாராத பணியாளா்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள துறை சாா்ந்த மருத்துவா்கள் அனைவரும் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது கட்டாயம். உள் நோயாளிகள் பிரிவை கண்காணிக்க 24 மணி நேரமும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மற்ற மருத்துவா்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருத்தல் அவசியம். நிலைய மருத்துவ அதிகாரி (ஆா்எம்ஓ) காலை 7 மணியிலிருந்தே மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக் கண்காணிப்பாளா்கள் காலை 8 மணி முதல் பணிகளை மேற்கொள்வது கட்டாயம்.
பல் மருத்துவம் மற்றும் இயன்முறை சிகிச்சைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும். தூய்மைப் பணியாளா்கள், உதவியாளா்களை எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவோ, ஊசி செலுத்தவோ அனுமதிக்கக் கூடாது.
மருத்துவமனைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையெனில் பொதுமக்கள் 104 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.