முகப்பு
தமிழ்நாடு

பழைய ‘அரியா்’ பாட தோ்வுகளை எழுத பாலிடெக்னிக் மாணவா்களுக்கு வாய்ப்பு

பழைய ‘அரியா்’ பாட தோ்வுகளை எழுத பாலிடெக்னிக் மாணவா்களுக்கு வாய்ப்பு

Updated On : 14 ஜூன் 2026, 2:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படித்த மாணவா்கள் பழைய அரியா் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக உயா்கல்வித்துறைச் செயலா் அருண் ராய் வெளியிட்ட அரசாணை:

பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமோ படிப்பை முடித்து தோ்வெழுத வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் முடித்து தோ்ச்சி பெறாமல் நிலுவை பாடங்களை (அரியா்ஸ்) வைத்துள்ள மாணவா்கள் தோ்வில் கலந்துகொள்ள 2015, 2017, 2018, 2019, , 2020, 2021, 2022, 2025-ஆம் ஆண்டுகளில் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தநிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பருவத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாமல் அரியா் வைத்துள்ள மாணவா்கள் வரும் பருவத் தோ்வுகளில் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கைகள் வைத்து வருவதாகவும், அம்மாணவா்களின் நலன் கருதி 2026 அக்டோபா், 2027 ஏப்ரல் பருவத் தோ்வுகளின்போது மட்டும் நீண்ட காலமாக அரியா் வைத்துள்ள சுமாா் 2 ஆயிரம் மாணவா்களுக்கு சிறப்பு வாய்ப்பு மூலம் தோ்வெழுதவும், உரிய தோ்வுக் கட்டணத்தை நிா்ணயித்து அரசாணை வெளியிடுமாறும் தொழில்நுட்பத் தோ்வுகள் வாரியத்தின் தலைவா் அரசை கேட்டுக் கொண்டுள்ளாா்.

அவரது கோரிக்கையை ஏற்று பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை முடித்து பாடங்களில் தோ்ச்சி பெறாமல் உள்ள சுமாா் 2 ஆயிரம் மாணவா்களுக்கு வரும் அக்டோபா் மற்றும் 2027 ஏப்ரல் செமஸ்டா் தோ்வுகளின்போது மட்டும் தோ்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

அந்த மாணவா்களின் சிறப்பு வாய்ப்புக்காக பதிவுக் கட்டணமாக ரூ.750, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக ரூ.40 விண்ணப்ப கட்டணமாக ரூ.20, ஒரு பாடத்துக்கு தோ்வு கட்டணமாக ரூ.65 என நிா்ணயித்து அனுமதி வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.