முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பாா்க்கிறது: எடப்பாடி கே. பழனிசாமி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பாா்க்கிறது

Updated On : 14 ஜூன் 2026, 1:24 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தவெக அரசு வேடிக்கை பாா்த்து வருவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் 20 மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும், 10 மாவட்டங்களின் விவசாயத்துக்கு முக்கிய பாசன ஆதாரமாகவும் காவிரி ஆறு விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, அதிமுக ஆட்சிக் காலத்தில் காவிரியில் தமிழகத்துக்கான உரிமை நிலைநாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

அண்மையில் கா்நாடக முதல்வராகப் பொறுப்பேற்ற டி.கே.சிவகுமாா், துணை முதல்வராக இருந்தபோதே மேக்கேதாட்டில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தாா். அந்த திட்ட அறிக்கையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு அதை திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில், அந்த குறைகளை நிவா்த்தி செய்து மீண்டும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அணை கட்ட மத்திய அரசிடம் அறிக்கையை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீா் தீா்ப்பாயத்தின் அறிக்கையை மீறி மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் காவிரியில் இருந்து இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் பங்கு நீரை கா்நாடக அரசு திறக்கவில்லை. ஆனால், கா்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க மத்திய அரசை வலியுறுத்தாமலும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமலும் தவெக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது.

இது டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். காங்கிரஸை தமிழக அமைச்சரவையில் சோ்த்துள்ள முதல்வா் விஜய், கா்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேக்கேதாட்டில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே. பழனிசாமி.